அரசு அலுவலகங்களில் ஜெயலலிதா படம் இருக்கலாமா? தலைமை செயலாளருக்கு மதுரை ஐகோர்ட் நோட்டீஸ்.

jayalalitha photoமுதலமைச்சர் பதவியில் இல்லாத ஜெயலலிதாவின் படங்களை அரசு அலுவலகங்களில் வைத்துள்ளது சட்டவிரோதம் என்றும் உடனடியாக ஜெயலலிதா படத்தை அகற்ற வேண்டும் என்று தாக்கல் செய்யப்பட்ட ஒரு வழக்கில் தலைமைச் செயலாளர் பதில் அளிக்க வேண்டும் என மதுரை ஐகோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.

மதுரை கோ.புதூரை என்ற பகுதியை சேர்ந்தவர் எஸ்.கருணாநிதி,  மதுரை வழக்கறிஞர் சங்க துணைச்செயலாளரான இவர், மதுரை ஐகோர்ட்டு கிளையில் சமீபத்தில் ஒரு மனுவை தாக்கல் செய்தார். அந்த மனுவில் அவர் கூறியிருப்பதாவது:

ஜனாதிபதி, பிரதமர், முதல்-அமைச்சர், மகாத்மாகாந்தி, ஜவஹர்லால் நேரு, திருவள்ளுவர், அண்ணா, காமராஜர், ராஜகோபால் ஆச்சாரி, தந்தை பெரியார், அம்பேத்கார், முத்துராமலிங்கத் தேவர் ஆகியோரின் உருவப்படங்களை மட்டும் அரசு அலுவலகங்களில் வைத்துக்கொள்ளலாம் என்று தமிழக அரசு ஏற்கனவே உத்தரவிட்டுள்ளது.

இந்த உத்தரவுக்கு புறம்பாக அரசு அலுவலகங்களில் ஜெயலலிதா உருவப்படங்கள் வைக்கப்பட்டுள்ளன. தற்போது, ஜெயலலிதா முதல்-அமைச்சர் பதவியில் இல்லை. இதுபோன்ற சூழ்நிலையில் அவரது உருவப்படங்களை அரசு அலுவலகங்களில் வைத்து இருப்பது நியாயமற்றது.

எனவே, அரசு திட்டம் தொடர்பான அறிவிப்பு பலகைகளில் ஜெயலலிதாவின் பெயர் மற்றும் படங்களை நீக்கவும், அரசு அலுவலகங்களில் ஜெயலலிதா படத்தை அகற்றவும் உத்தரவிட வேண்டும்.

இவ்வாறு மனுவில் கூறப்பட்டு இருந்தது.

இந்த மனுவை விசாரணைக்கு எடுத்துக்கொண்ட நீதிபதிகள் வி.தனபாலன், வி.எம்.வேலுமணி இது சம்பந்தமாக தமிழக அரசின் தலைமைச் செயலாளர் பதில் அளிக்க நோட்டீசு அனுப்ப உத்தரவிட்டனர். பின்னர், விசாரணையை 2 வாரத்துக்கு தள்ளிவைத்தார்.

Leave a Reply