எகிப்து நாட்டில் விபத்துக்கள் நடைபெறுவதை தடுப்பதற்காக வாகன டிரைவர்களுக்கு போதை மருந்து பரிசோதனை நடத்த அந்நாட்டு அரசு முடிவு செய்தது. அதற்காக அரசு மருத்துவ மனைகளில் பஸ் டிரைவர்கள் உள்பட வாகன ஓட்டிகள் அனைவரும் பரிசோதனைக்காக தங்கள் சிறுநீரை வழங்க வேண்டும் என அறிவிக்கப்பட்டது.
இந்த அறிவுறுத்தலின்படி பஸ் டிரைவர்கள் உள்பட அனைவரும் தங்களது சிறுநீரை பரிசோதனைக்கு கொடுத்தனர். ஆனால் போதை பழக்கம் உள்ள ஒருவர் மட்டும் தனது சிறுநீரை கொடுப்பதற்கு பதிலாக தனது மனைவியின் சிறுநீரை மாற்றி கொடுத்தார். தன்னுடைய போதை பழக்கத்தை மறைக்கவே அவர் இவ்வாறு செய்ததாக கூறப்படுகிறது.
அவர் கொடுத்த சிறுநீர் பரிசோதனை முடிவை பார்த்த பரிசோதனை குழுவினர் அதிர்ச்சி அடைந்தனர். காரணம் அந்த சிறுநீருக்குரிய நபர் கர்ப்பமாக இருந்ததாக ரிசல்ட் வந்திருந்தது. அதன்பின்னர் நடந்த விசாரணையில் அவருடைய மனைவி இரண்டு மாத கர்ப்பமாக இருக்கின்றார் என்றும், போதை பழக்கத்தை மறைக்க அவர் தனது மனைவி சிறுநீரை மாற்றிக்கொடுத்ததும் தெரியவந்தது.
பரிசோதனை ரிப்போர்ட்டை டிரைவரிடம் கொடுத்த அதிகாரி கிண்டல் சிரிப்புடன் ‘நீங்கள் கர்ப்பம் அடைந்திருப்பதற்கு எனது வாழ்த்துக்கள்’ என கூறி கை குலுக்கி அனுப்பி வைத்தார். அவர் மீது எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.