மேற்கு ஜெர்மனிக்கு கிழக்கு ஜெர்மனியை சேர்ந்த மக்கள் செல்வதை தடுக்க 1961ஆம் ஆண்டு பெர்லின் சுவர் கட்டப்பட்டது. பின்னர் எழுந்த போராட்டங்களை தொடர்ந்து கடந்த 1989ஆம் ஆண்டு இதே தினத்தால் தான் சுவர் இடித்து தள்ளப்பட்டது.
கடந்த 25ஆண்டுகளுக்கு முன்னர் கிழக்கு மற்றும் மேற்கு ஜெர்மனியை பிரித்த பெர்லின் சுவர் இடிக்கப்பட்டு மீண்டும் ஒன்றுபட்ட ஜெர்மனியாக மாறியது. இந்த சுவர் இடிக்கப்பட்டதன் 25ஆம் ஆண்டு தினம் நேற்று கொண்டாடப்பட்டது. இந்த விழாவையொட்டி ஜெர்மனி தலைநகர் பெர்லின் நகரில் பல்வேறு கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றன.
பெர்லின் சுவர் அமைந்திருந்த 15 கி.மீ தொலைவிற்கு, சுமார் 7 ஆயிரம் பலூன்களைக் கொண்டு செயற்கையாக ஒரு பலூன்சுவர் அமைக்கப்பட்டிருந்தது. இந்த பலூன் சுவரை லட்சக்கணக்கான ஜெர்மானியர்கள் பார்வையிட்டனர். இந்த சுவரை இடிப்பதற்காக பாடுபட்டு தங்கள் இன்னுயிரை நீத்த ஜெர்மானியர்களுக்கு அரசு கடமைப்பட்டுள்ளதாக அதிபர் ஏஞ்சலா மெர்கல் தெரிவித்துள்ளார்.
இந்த நிகழ்ச்சியில் கலந்து கொள்ள முன்னாள் ரஷ்ய அதிபர் மிகையில் கோர்பசேவ் ஜெர்மனிக்கு வருகை தந்திருந்தார். உக்ரைன் விவகாரத்தில் ரஷ்யாவுடன் கருத்து வேறுபாடு கொண்ட ஜெர்மனிக்கு கோர்பசேவ் வந்திருந்தது உலக நாடுகளை வியப்புறவைத்தது.