சிறுவயதில் இருந்து நண்பர்களாக பழகி வருகிறார்கள் விமல் மற்றும் சூரி. வேலை வெட்டி ஏதும் இல்லாமல் ஊர் சுற்றி வரும் இவர்கள் வேலை தேடி சென்னைக்கு ரயில் ஏறுகின்றனர்..
தூத்துக்குடியில் இருந்து ரெயில் சென்னை சென்று கொண்டிருக்கும் போது அதே ரயிலில் பயணம் செய்யும் நாயகி பிரியா ஆனந்தை ஒரு மர்ம கும்பல் கொலை செய்ய பார்க்கிறது. அந்த கொலைகாரர்களிடம் இருந்து விமலும் சூரியும் பிரியா ஆனந்தை காப்பாற்றுகின்றனர்.
பிரியா ஆனந்த், தான் தூத்துக்குடியில் மருத்துவ முகாமிற்கு சென்றிருந்தபோது, தன் தோழி பணிபுரியும் தொழிற்சாலையில் உள்ள தொழிலாளர்கள் பல நோய்களால் பாதிக்கப்பட்டுள்ளதை கண்டுபிடித்ததாகவும், இதுகுறித்து தொழிற்சாலை முதலாளி நாசரிடம் கூறியதாகவும், ஆனால் நாசர் தன்னை அவமதித்து அனுப்பியதால் நீதிமன்றம் சென்றதாகவும் ப்ரியா ஆனந்த் விமல் மற்றும் சூரியிடம் கூறுகிறார். தற்போது தீர்ப்பு நெருங்குவதால் தன்னை கொலை செய்ய முயற்சி செய்கிறார்கள் என்றும் அதனால் தன்னை காப்பாற்றுமாறும் ப்ரியா ஆனந்த உதவி கேட்கிறார்.
இதை கேட்ட விமலும் சூரியும் நாங்கள் உங்களுக்கு துணையாக இருக்கிறோம் என்று கூறுகிறார்கள். இறுதியில் பிரியா ஆனந்த் கோர்ட்டில் வெற்றி பெற்றாரா? விமல் தன் காதலை பிரியா ஆனந்திடம் சொன்னாரா? என்பதே மீதிக்கதை.
இந்த படத்திற்கு ஹீரோ யார் என்பதே சந்தேகமாக உள்ளது. ஹீரோயினியை காதலிப்பதால்தான் விமலை எல்லோரும் ஹீரோ என்று சொல்கின்றனர். ஆனால் படத்தில் ஹீரோத்தனம் செய்வதெல்லம் சூரிதான். கிளைமாக்ஸில் கூட நீதிமன்றத்தில் ஹீரோவுக்கு பதில் சூரிதான் அதிக வசனம் பேசுகிறார். விமல் ஹீரோவுக்கு நண்பனாக வருவது போல் தனது தூங்குமூஞ்சியை வைத்துக்கொண்டு ஒரு வழியாக சமாளித்துள்ளார்.
சூரியின் ஒரே மாதிரியான காமெடி வரவர சலிப்பை தருகிறது. சந்தானத்தின் மார்க்கெட்டை உடைக்க வந்ததாக கூறப்படும் சூரி, இதுமாதிரி நான்கு படங்களில் காமெடி செய்தார் என்றால் காணாமல் போய்விடுவார்.
துணை நடிகைகள் கூட அழகாக இருக்கும் இந்த காலத்தில் இப்படி ஒரு சுமாராண நடிகையை ஹீரோயினியாக எப்படி இயக்குனர்கள் செலக்ட் செய்கின்றார்கள் என்றே தெரியவில்லை. படத்தில் ப்ரியா ஆனந்த்திற்கு வெயிட்டான கேரக்டர். ஆனால் அந்த கேரக்டரை ப்ரியா ஆனந்த் சொதப்பியுள்ளார்.
தம்பி ராமையா, சிங்க முத்து என்று காமெடி நடிகர்களை வைத்து நகைச்சுவை படமாக எடுக்க முயற்சி செய்ததும் பெரிதாக எடுபடவில்லை.
டி.இமான் இசையில் பாடல்கள் அனைத்தும் கேட்கும் ரகம். லட்சுமி மேனன் பாடிய பாடல் ரசிக்கும் படியாக உள்ளது. ஒளிப்பதிவு சுமார் ரகம்.
மொத்தத்தில் ஒரு ஊர்ல ரெண்டு கோமாளி