சட்டசபையை கூட்ட ஸ்டாலின் அறிவுரை எங்களுக்கு தேவையில்லை. முதல்வர் பன்னீர்செல்வம்

stalin and opசட்டசபையை எப்போது கூட்ட வேண்டும் என்பது எங்களுக்கு தெரியும். இதுகுறித்து மு.க.ஸ்டாலின் அறிவுரை கூற வேண்டிய அவசியமில்லை என முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார்.

தமிழக மீனவர்களின் மரண தண்டனை விவகாரத்தில் சட்டப்பேரவையைக் கூட்டி தீர்மானம் நிறைவேற்ற வேண்டும் என திமுக பொருளாளர் மு.க.ஸ்டாலின் அறிக்கை ஒன்றை சமீபத்தில் வெளியிட்டிருந்தார். இதற்கு பதிலளித்து முதல்வர் பன்னீர்செல்வம் இன்று விடுத்துள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:

தமிழக மீனவர்கள் ஐந்து பேர் சிறை பிடிக்கப்பட்ட நாளிலிருந்தே அவர்களது குடும்பங்களைப் பாதுகாக்கவும், மீனவர்கள் மீது தொடரப்பட்ட பொய் வழக்குகளை சட்ட ரீதியாக எதிர்கொள்ளவும் தேவையான அனைத்து நடவடிக்கைகளையும் முன்னாள் முதல்வர் ஜெயலலிதா எடுத்து வந்தார். பொய் குற்றச்சாட்டின் பேரில் சிறையில் அடைக்கப்பட்டு, வழக்கை எதிர்கொண்ட மீனவர்களைக் குற்றச்சாட்டிலிருந்து விடுவிக்கும் வகையில் சட்ட ரீதியான நடவடிக்கைகளையும், தூதரக ரீதியான நடவடிக்கைகளையும் எடுத்த போதும், கொழும்பு உயர் நீதிமன்றம் ஐந்து மீனவர்களுக்கும் மரண தண்டனை விதித்து உத்தரவிட்டது.

இந்த விவகாரத்தில் மேல்முறையீடு செய்வதற்கான அனைத்துச் செலவினங்களுக்கென ரூ.20 லட்சத்தை தமிழக அரசு இந்திய தூதரகத்திற்கு அனுப்பி வைத்துள்ளது.

இந்திய அரசியலமைப்புச் சட்டத்தின் படி, ஒரு கூட்டத் தொடரின் கடைசி அமர்வுக்கும், அடுத்தக் கூட்டத் தொடரின் முதல் அமர்வுக்கும் இடையே உள்ள கால அளவு ஆறு மாதங்களுக்குக் குறைவாக இருத்தல் வேண்டும்.  எனவே, சட்டப்பேரவை கூட்டத் தொடர் எப்போது கூட்டப்பட வேண்டும் என்பது எங்களுக்குத் தெரியும். திமுக பொருளாளர் மு.க.ஸ்டாலினிடம் இதுபற்றி அறிவுரை கேட்க வேண்டிய அவசியம் எங்களுக்கு இல்லை.

Leave a Reply