காவிரி ஆற்றின் குறுக்கே இரண்டு அணைகள் கட்டி அதில் குடிநீர் திட்டத்திற்காக 48 டி.எம்.சி தண்ணீர் தேக்கி வைக்கப்படும் என கர்நாடக நீர்வளத்துறை அமைச்சர் எம்.பி.பட்டீல் கூறியுள்ளதால் தமிழக விவசாயிகள் இடையே பெரும் பதட்டம் ஏற்பட்டுள்ளது.
தமிழ்நாட்டுக்கு தண்ணீர் வழங்குவதுபோக மீதி இருக்கும் கர்நாடக மாநில பங்கு தண்ணீரைத்தான் இந்த அணையில் தேக்கி வைக்க இருப்பதாகவும், இதனால் தமிழ்நாட்டுக்கு எவ்வித பாதகம் இல்லை என்றும் அவர் கூறியுள்ளார்.
காவிரி நடுவர்மன்ற தீர்ப்புப்படி தமிழ்நாட்டுக்கு விடவேண்டிய தண்ணீரை தவறாமல் திறந்துவிடுகிறோம். அதனால் இந்த திட்டத்தை தமிழ்நாடு அரசு எதிர்க்காது என நம்புகிறேன். ஒருவேளை எதிர்த்தாலும் கர்நாடகா இந்த திட்டத்தில் இருந்து பின்வாங்காது. இதை எதிர்ப்பது அவர்களின் உரிமை. அவர்களது வேலையை அவர்கள் செய்யட்டும். நமது வேலையை நாம் செய்கிறோம்.
இந்த திட்டத்துக்கு தண்ணீர் தேக்கி வைப்பதற்கு காவிரி ஆற்றின் குறுக்கே புதிய அணையை கட்ட 22 இடங்களில் இடம் கண்டறியப்பட்டு உள்ளது. இதில் ஒன்று அல்லது இரண்டு இடங்களில் புதிய அணை கட்டப்படும் என கூறியுள்ளார்.
கர்நாடக அரசின் இந்த அறிவிப்பு காரணமாக காவிரி டெல்டா பகுதி விவசாயிகள் கடும் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.