மது அருந்துதல், புகைப்பிடித்தல், உணவுப் பழக்கவழக்க மாற்றம், உடற்பயிற்சியின்மை உள்ளிட்ட காரணங்களால் இன்றைய காலத்தில் இளைஞர்கள்கூடப் பல்வேறு நோய்களால் பாதிக்கப்படுகின்றனர். குறிப்பாகத் தகவல் தொழில்நுட்பத் துறையில் பணிபுரியும் பெரும்பாலான இளைஞர்கள் வேலைப்பளு, மன அழுத்தம் போன்ற காரணங்களால் தலைவலி, சர்க்கரை நோய் போன்ற பல்வேறு பாதிப்புகளுக்கு ஆளாகின்றனர்.

அதேசமயம் அறுவை சிகிச்சைகளுக்கு அபரிமிதமான கட்டணம் வசூலிப்பதன் காரணமாக நடுத்தர, ஏழை நோயாளிகளுக்குத் தரமான சிகிச்சை என்பது எட்டாக் கனியாக இருந்துவருகிறது. இதனால், பெரும்பாலான ஏழை-எளிய நோயாளிகள் அரசு மருத்துவமனைகளையே நாடுகிறார்கள்.

surgery

நவீன சிகிச்சை

இந்திய மருத்துவத்தில் மூளைக் கட்டி, இதயக் கோளாறு, சிறுநீரகப் பிரச்சினை, எலும்பு முறிவு ஆகிய நோய்களுக்கு ஆபரேஷன் மூலம் சிகிச்சை அளிக்கப்படுகிறது. அதே நேரம் இரைப்பைப் புற்று நோய்க்குக் கத்தியின்றி, ரத்தமின்றி நவீன மருத்துவ சிகிச்சை அளிக்க முடியும் என்பதைக் கோவை மருத்துவமனை நடத்திக்காட்டி வருகிறது.

கோவை எண்டாஸ்கோபி மற்றும் லேப்ரோஸ்கோபி எக்சலன்ஸ் மையத்தின் தலைவர் டாக்டர் பி.எஸ்.ராஜன், இத்துறையில் 20 ஆண்டு அனுபவம் பெற்றவர். நாட்டில் பல்வேறு மருத்துவர்களுக்கு இவர் லேப்ராஸ்கோபி பயிற்சி அளித்துள்ளார். எண்டாஸ்கோபி சிகிச்சை மூலம் தழும்பு இன்றி குடல்வால் நீக்கம் செய்த முதல் மருத்துவர். இதே முறையில் தழும்பு இன்றி பித்தப்பையை அகற்றிய ஆசியாவின் முதல் மருத்துவர். உணவுக் குழாய் அடைப்புக்கு அறுவைசிகிச்சை இன்றி எண்டாஸ்கோபி மூலம் சிகிச்சை அளிக்கும் தென்னிந்தியாவின் முதல் நிபுணர்.

பரிசோதனை

“சில ஆண்டுகளுக்கு முன்பு ஜப்பான், கொரியா நாடுகளுக்குச் சென்றிருந்தேன். அங்கு எண்டாஸ்கோபி ஸ்கிரீனிங் பரிசோதனை மூலம் 5 நோயாளிகளுக்கு இரைப்பையில் சிறு புண் இருப்பதைக் கண்டுபிடித்து அகற்றுவதைப் பார்த்தேன். ‘இது எப்படிச் சாத்தியம்?’ எனக் கேட்டபோது, 45 வயது நிரம்பிய அனைவருக்கும் அரசு சார்பில் கட்டாய எண்டாஸ்கோபி ஸ்கிரீனிங் பரிசோதனை அங்கே மேற்கொள்ளப்படுவது தெரிய வந்தது. ‘இதுபோன்ற பரிசோதனைகளை மேற்கொள்வது நோயை முன்கூட்டியே கண்டறிய உதவும்.

பொதுவாக நெஞ்சு எரிச்சல், உணவு விழுங்குவதில் சிரமம் போன்றவை ஏற்பட்ட பிறகே பலரும் பரிசோதனைக்குச் செல்கின்றனர். அப்போது எண்டாஸ்கோபி பரிசோதனை மேற்கொண்டால் இரைப்பையில் புண், அதாவது புற்றுநோய் இருப்பது தெரிய வரலாம். அது மோசமான மூன்றாவது நிலையில்கூட இருக்கலாம்.

மாஸ்டர் செக்-அப் செய்யும்போது இந்தப் பிரச்சினை தெரியவராது. இரைப்பை உள்ளிட்ட உடல் உறுப்புகளுக்கு வெளியே இருப்பது மட்டுமே அதில் தெரியவரும். இரைப்பைப் புற்று நோய் இருந்தால் எண்டாஸ்கோபி முறையில்தான் எளிதாகக் கண்டுபிடிக்க முடியும்” என்கிறார் டாக்டர் ராஜன்.

பல்செட்டை முழுங்கியவருக்கும், கோழி எலும்பை விழுங்கி அவதிப்பட்டவருக்கும் என்டாஸ்கோபி மூலம் சிகிச்சை அளிக்கப்பட்டுள்ளது. உணவுக் குழாயில் முற்றிய புற்று நோய்க்கும் எண்டாஸ்கோபி மூலம் சிகிச்சை அளிக்கலாம். பித்தநாளக் கல் எண்டாஸ்கோபி மூலம் அகற்றப்படுகிறது. பாதிக்கப்பட்ட பித்தப்பை லாப்ராஸ்கோபி மூலம் அகற்றப்படுகிறது.

இலவச முகாம்கள்

எண்டாஸ்கோபி பரிசோதனை பற்றி விழிப்புணர்வு ஏற்படுத்துவதற்காக மாதத்துக்கு 2 முகாம்கள் என, இதுவரை 14 இலவச முகாம்களை நடத்தி 500 பேருக்கு இவர் பரிசோதனை செய்துள்ளார்.

இதில் ஒருவருக்கு உணவுக் குழாயில் புற்று நோய் இருப்பதையும் 2 பேருக்கு இரைப்பைப் புற்று நோயும், மற்றொருவருக்குச் சிறுகுடல் புற்று நோய் இருப்பதையும் கண்டறிந்து சிகிச்சை அளித்துள்ளார். மேலும் 15 பேருக்குப் புற்று நோய் முதல் நிலையில் இருப்பது கண்டறியப்பட்டது.

“புகை பிடித்தல், மது அருந்துதல், குறித்த நேரத்தில் உணவு உட்கொள்ளாமை போன்ற காரணங்களால் 45 வயதைக் கடந்தவர்களுக்கு இரைப்பைப் புற்று நோய் வர வாய்ப்பு உண்டு. அதனால் 45 வயதுக்கு மேற்பட்டோர், இந்த பரிசோதனையை மேற்கொள்வது நல்லது” என்கிறார் டாக்டர் ராஜன். எண்டாஸ்கோபி ஸ்கிரீனிங் பரிசோதனை விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் 2 நடமாடும் வேன்கள் மூலம் இலவசப் பரிசோதனை முகாம்களை நடத்தவும் இவர் திட்டமிட்டுள்ளார்.