சுதந்திர இந்தியாவின் முதல் பிரதமரான பண்டித ஜவஹர்லால் நேருவின் 125வது பிறந்த நாள் டெல்லியில் வருகின்ற 17 மற்றும் 18 ஆம் தேதிகளில் மிகச்சிறப்பாக கொண்டாட காங்கிரஸ் கட்சி முடிவு செய்துள்ளது. இதற்காக சர்வதேச மாநாடு ஒன்றை காங்கிரஸ் கட்சி நடத்தவுள்ளது. இந்த மாநாட்டில் கலந்துகொள்ள ஜெயலலிதா உள்பட மாநில கட்சிகளின் தலைவர்களை அழைக்க காங்கிரஸ் முடிவு செய்துள்ளது.
கடந்த பாராளுமன்ற தேர்தலில் வெறும் 44 இடங்களை மட்டுமே பெற்று படுதோல்வி அடைந்த காங்கிரஸ் மாநில கட்சிகளை அரவணைத்து செல்ல விரும்புகிறது. இதன்படி அ.தி.மு.க. பொதுச்செயலாளர் ஜெயலலிதா, சமாஜ்வாடி கட்சி தலைவர் முலாயம் சிங் யாதவ், திரிணாமுல் காங்கிரஸ் தலைவர் மம்தா பானர்ஜி, ஐக்கிய ஜனதாதளத்தின் மூத்த தலைவர் நிதிஷ் குமார் மற்றும் இடதுசாரி கட்சிகளின் தலைவர்களுக்கும் காங்கிரஸ் கட்சி சார்பில் சோனியா அழைப்பு விடுத்துள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன
ஆனால் பிரதமர் நரேந்திர மோடி உள்பட பாரதிய ஜனதா கட்சி தலைவர்கள் யாருக்கும் அவர் அழைப்பு விடுக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. ஜெயலலிதா உள்பட பாஜக எதிர்ப்பு கொள்கையுடைய கட்சிகளை சோனியா அவரணைத்துக்கொள்ள முடிவு செய்துள்ளதால் டெல்லி அரசியலில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.