காலை அலுவலகம் போகும்போது நன்றாக இருந்த தன் மனைவி, மாலையில் எரிந்து விழுவதன் மர்மம் கணவர்களுக்குப் பிடிபடுவது இல்லை. தான் ஏன் இப்படி எரிச்சலாக, கோபமாக நடந்துகொள்கிறோம் என்பது பல நேரங்களில் அந்தப் பெண்ணுக்கும் புரியாது. பொதுவாகவே சோர்வு, எரிச்சல், மன அழுத்தம் போன்ற மனநிலை மாற்றங்கள், மாதவிலக்கின் போது பெண்களுக்கு ஏற்படும். இதுவே ‘ப்ரீமென்சுரல் சிண்ட்ரோம்’ என்று சொல்லப்படுகிறது. மாதவிலக்கு நாளுக்கு ஒரு வாரம் முன்பு நான்கில் மூன்று பெண்கள் இப்படி பாதிப்புக்குள்ளாகிறார்கள். 20 முதல் 30 வயதுக்கு உட்பட்ட பெண்களுக்கு இந்தப் பிரச்னை அதிகமாக இருக்கிறது.
அறிகுறிகள்
மனநிலை அல்லது நடவடிக்கையில் வெளிப்படும் அறிகுறிகள்
டென்ஷன் அல்லது மனப்பதற்றம்
மன அழுத்தம்
அழுகை உணர்வு
எரிச்சல் அல்லது கோபம் போன்று மனநிலையில் மாற்றம்
பசி இன்மை அல்லது அதிகம் சாப்பிடும் உணர்வு
தூக்கத்தில் பிரச்னை
மற்றவர்களிடமிருந்து ஒதுங்கியிருத்தல்
கவனக்குறைவு அல்லது கவனச்சிதறல்
மாதவிலக்கின் போது உடலில் வெளிப்படக்கூடிய அறிகுறிகள்
மூட்டு வலி
மார்பகத்தில் வலி
தலைவலி
சோர்வு
வயிறு வீக்கம்
மார்பகம் கடினமாக இருத்தல்
முகப்பரு
மலச்சிக்கல் அல்லது வயிற்றுப்போக்கு
இந்த அறிகுறிகள் அனைத்தும் ஒருவருக்கு தோன்ற வேண்டும் என்று இல்லை. இவற்றில் ஒருசில அறிகுறிகள் மட்டும்கூட இந்தப் பிரச்னை உள்ள பெண்களுக்கு வெளிப்படலாம். சில பெண்களுக்கு அதிகப்படியான உடல் வலி மற்றும் மனநிலை மாற்றம் காரணமாக அன்றாட வேலைகள் பாதிக்கப்படலாம். குடும்ப மருத்துவரையோ மகளிர் மற்றும் மகப்பேறு மருத்துவரையோ அணுகி ஆலோசனை பெறவேண்டும்.
காரணங்கள்
ஹார்மோன் சுழற்சியில் மாற்றம்
மூளையில் ரசாயன மாற்றம்
மன அழுத்தம்
தவறான உணவுப் பழக்கம்
வைட்டமின் பி6 பற்றாக்குறை
ஸ்ட்ரெஸ் தவிர்த்தல்
நிம்மதியான தூக்கம் அவசியம்
உடலுக்கும் மனதுக்கும் அமைதி தரும் யோகா, தியானப் பயிற்சிகளைச் செய்யலாம்.
உணவில் செய்ய வேண்டிய மாற்றங்கள்
1. ஒரே நேரத்தில் அதிக அளவில் சாப்பிடாமல், உணவைப் பிரித்துச் சிறிது சிறிதாக எடுத்துக்கொள்ள வேண்டும்.
2. உப்பைக் குறைக்க வேண்டும். உப்பு அளவு அதிகம் உள்ள பதப்
படுத்தப்பட்ட, பாக்கெட்டில் அடைக்கப்பட்ட உணவுகளைத் தவிர்க்க வேண்டும்.
3. பழங்கள், காய்கறிகளை அதிகம் எடுத்துக்கொள்ள வேண்டும்.
4. கால்சியம் சத்து அதிகம் உள்ள உணவுகளை எடுத்துக்கொள்ள வேண்டும். டாக்டர் பரிந்துரையின்பேரில் கால்சியம் மாத்திரை மற்றும் மல்ட்டி வைட்டமின் மாத்திரை எடுத்துக்கொள்ளலாம்.
5. காபி, டீ தவிர்க்க வேண்டும்.
உடற்பயிற்சி
தினசரி 30 நிமிடங்களுக்கு உடற்பயிற்சி செய்ய வேண்டும். அது நடைப்பயிற்சி, சைக்கிளிங், நீச்சல் பயிற்சி அல்லது இதர ஏரோபிக் பயிற்சியாக இருக்கலாம். தினசரி உடற்பயிற்சி செய்வது சோர்வு, மன அழுத்தத்தைப் போக்க உதவும்.