தி.நகர் பசுல்லா சாலையில் சுமார் 80 ஆண்டுகாலமாக இருந்துவந்த தூங்கு மூஞ்சி மரம் ஒன்று பட்டுப் போனதால் கடந்த இரண்டு நாட்களுக்கு முன்னர் சென்னை மாநகராட்சி ஊழியர்கள் அதை வெட்டிச் சாய்த்தனர். இந்த சம்பவம் அப்பகுதி மக்களிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
பசுல்லா தெருவில் 45 ஆண்டுகளாக சைக்கிள் பஞ்சர் ஒட்டும் கடை வைத்திருக்கும் கிருஷ்ணன் இதுபற்றி கூறும்போது, “இந்த தெருவில் நான் சுமார் 15 மரங்களை நட்டிருப்பேன். இங்குள்ள ஒவ்வொரு மரமும் எனக்கு குழந்தைப் போல. இந்நிலையில் இங்கிருந்த தூங்குமூஞ்சி மரத்தை வெட்டியது மிகவும் கவலையளிக்கிறது” என்றார்.
பசுல்லா தெருவில் தினமும் நடைப்பயிற்சி செல்லும் சேஷாத்ரி (60) கூறும்போது, “நான் பிறந்தது முதல் அந்த மரத்தைப் பார்த்து வருகிறேன். இவ்வளவு பெரிய மரத்தை வெட்டிய போது, மிகவும் கஷ்டமாக இருந்தது. தகுந்த காரண மில்லாமல், மரங்களை வெட்டுவதை தவிர்க்க வேண்டும்” என்றார்.
இந்த தெருவில் 40 ஆண்டுகளாக இஸ்த்ரி கடை வைத்திருக்கும் மோகன் கூறும்போது, “இப்பகுதியில் நான் 40 ஆண்டுகளாக இஸ்திரி கடை வைத்துள்ளேன். இந்த 40 ஆண்டுகளில் இப்பகுதியில் பலர் வயதாகி இறந்துள்ளனர். இப்போது இங்குள்ளவர்களுக்கு நிழல்தந்த மரமும் இறந்துவிட்டது” என்றார்.
அப்பகுதியைச் சேர்ந்த ஹரி என்பவர் இதுபற்றி கூறும்போது, “மனிதர்களுக்கு வயதானால் என்ன ஆகுமோ, அதுதான் அந்த மரத்துக்கும் நேர்ந்தது அந்த மரம், ஆங்கிலேயர் காலத்தில் நடப்பட்டது. இதுநாள் வரை, அனைவருக்கும் நல்லது செய்தது, இன்று இறந்து விட்டது” என்றார்.
இது குறித்து மாநகராட்சி அதிகாரி கூறும்போது, “பட்டுப்போன காரணத்தால் அந்த மரத்தின் கிளைகள் ஒவ்வொன்றாக விழுந்து கொண்டிருந்தது. இதனால், பொது மக்களுக்கு ஆபத்து ஏற்படக்கூடும் என்பதால்தான் அந்த மரம் வெட்டப்பட்டது,” என்றார்.