வேலூர் மாவட்டம், வாணியம்பாடியில் சுமார் 250 ஆதார் அட்டைகள் குப்பைத் தொட்டியில் இருந்து கண்டெடுக்கப்பட்டுள்ளதால் அந்த பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
கடந்த மன்மோகன் சிங் தலைமையிலான காங்கிரஸ் அரசு, அரசின் மானியங்களை பொதுமக்கள் எளிதில் பெற கொண்டு வந்த திட்டம்தான் ஆதார் அட்டையை. அதன்பின்னர் பொறுப்பேற்ற நரேந்திர மோடியின் மத்திய அரசும் ஆதார் அட்டை வழங்கும் பணியை முடுக்கி விட்டுள்ளது. இதனால், ஆதார் பொதுமக்கள் ஆதார் அட்டைகள் பெற ஆர்வத்துடன் விண்ணப்பித்து வருகின்றனர். ஏற்கனவே லட்சக்கணக்கானோர்களுக்கு தமிழகத்தில் ஆதார் அட்டைகள் விநியோகிக்கும் பணி முடிந்துவிட்டது.
இந்நிலையில், வேலூர் மாவட்டம், வாணியம்பாடி அருகே உள்ள பஷீராபாத் என்ற கிராமத்தில் உள்ள குப்பைத் தொட்டியில் 250 ஆதார் அட்டைகள் கிடந்ததை ஊர்மக்கள் பார்த்து அதிர்ச்சியடைந்துள்ளனர். இது குறித்து ஊர்மக்கள் பத்திரிகையாளர்களுக்கு தகவல் தெரிவித்துள்ளனர்.
பின்னர் செய்தியாளர்கள், காவல்துறையினருக்கு தகவல் கூறியுள்ளனர். அவர்கள் சம்பந்தப்பட்ட அதிகாரிகளுடன் சம்பவ இடத்துக்கு வந்து 250 ஆதார் அட்டைகளை கைப்பற்றி விசாரணை நடத்தினர்.
இந்நிலையில், திருப்பத்தூர் அஞ்சல் கோட்ட அதிகாரி சம்பத், சம்பந்தப்பட்ட கிராமத்திற்கு இன்று நேரில் சென்று விசாரணை நடத்தினார். அப்போது, வாணியம்பாடி தபால் நிலையத்தில் போஸ்ட்மேனாக பணியாற்றி வரும் பரந்தாமன் என்பவர்தான் இந்த ஆதார் அட்டைகளை விநியோகிக்க கொண்டு சென்றது தெரியவந்தது. அவரிடம் இருந்த ஆதார் அட்டைகள் எப்படி குப்பைத் தொட்டிக்கு சென்றது என்பது குறித்து போஸ்ட்மேன் பரந்தாமனிடம் விசாரணை நடந்து வருகிறது.