சமூக வலைதளங்களில் முக்கிய இடத்தில் இருக்கும் ஃபேஸ்புக் தற்போது அலுவலக உபயோகத்திற்கான பிரத்யேக தளத்தை ஏற்படுத்த திட்டமிட்டு வருவதாக செய்திகள் வெளியாகி உள்ளன.
ஏற்கனவே அலுவலக ரீதியிலான உபயோகத்திற்கான இணையதளமாக ‘லிங்கிடு இன்’ உள்ளிட்ட சில தளங்கள் செயல்பட்டு வருகின்றன. இவை சில நாடுகளில் சிறப்பாக உபயோகப்படுத்தப்பட்டாலும், அவை ஃபேஸ்புக் போன்ற வரவேற்பையும் பயனீட்டாளர்களின் விருப்பங்களையும் அனைத்து நாடுகளிலும் பெறவில்லை.
இந்த நிலையில் ‘ஃபேஸ்புக் அட் ஒர்க்’ என்ற புதிய திட்டத்துக்கான பணிகளை ஃபேஸ்புக் நிறுவனம் ரகசியமாக மேற்கொண்டு வருவதாகவும், அதற்காக அதன் நிறுவனர் மார்க் ஸக்கர்பெர்க் இந்த பணியில் தீவிரம் காட்டி வருவதாகவும் ‘தி ஃபினான்ஷியல் டைம்ஸ்’ தனது செய்தியில் தெரிவித்துள்ளது.
இந்த புதிய இணையதளம் பயனீட்டாளர்களுக்கு தங்களது தனிப்பட்ட ஃபேஸ்புக் பக்கத்திலிருந்து முற்றிலும் வேறுபட்ட அளவில் அமைய வேண்டும் என்றும், இதில், ஃபேஸ்புக்கின் பிற அம்சங்கள் வந்துவிடக் கூடாது என்பதிலும் முக்கியத்துவம் செலுத்தி ஃபேஸ்புக் நிறுவனம் முனைப்புடன் செயல்பட்டு வருவதாக அந்த செய்தியில் குறிப்பிட்டுள்ளது.
ஃபேஸ்புக் நிறுவனம் அலுவலக பயன்பாட்டிற்கான பிரத்தியே தளத்தை உருவாக்கி வருவதாக இதற்கு முன்னர் பலமுறை செய்திகள் வெளியாகி உள்ளன. அவை இ-மெயில் சேவைகள், சாட் வசதிகள் கொண்டவையாகவும், அலுவலக பணிகளுக்கு ஏற்ற அம்சங்களை பூர்த்தி செய்யும் என்றும் தெரிவிக்கப்பட்டது.
ஆனால் இதுவரை இதன் தொடர்பான அதிகாரப்பூர்வ அறிவிப்பை ஃபேஸ்புக் நிறுவனம் வெளியிடாத நிலையில், இம்முறை வந்துள்ள செய்தி உண்மையாக வேண்டும் என்ற எதிர்ப்பார்ப்பு சமூக வலைதள ஆர்வலர்கள் மத்தியில் ஏற்பட்டுள்ளது.