கிசான் விகாஸ் பத்திர திட்டம் மீண்டும் துவக்கப்பட்டதால் நாட்டில் கருப்பு பண பெருக்கம் அதிக ஏற்பட வாய்ப்பு உள்ளது என்றும் இதன் மூலம் கருப்புப்பண பெருக்கத்தை மத்திய அரசு ஊக்குவிக்கிறது என்று காங்கிரஸ் குற்றம் சாட்டியுள்ளது.
நேற்று முன் தினம் மத்திய நிதியமைச்சர் அருண் ஜெட்லி கிசான் விகாஸ் பத்திர விற்பனையை மீண்டும் தொடங்கி வைத்தார். இதுகுறித்து காங்கிரஸ் பொதுச்செயலாளர் அஜய் மக்கான், டெல்லியில் இன்று நிருபர்களுக்கு பேட்டியளித்தபோது, “சுவிஸ் வங்கிகளில் பதுக்கி வைக்கப்பட்டுள்ள இந்தியர்களின் கருப்பு பணத்தை மீட்டு வருவது குறித்து தேர்தலின்போது பல்வேறு வாக்குறுதிகளை அளித்த மோடி, ஆட்சியைப் பிடித்தவுடன் தற்போது உள்நாட்டிலேயே கருப்பு பண பெருக்கத்தை கிசான் விகாஸ் பத்திரம் மூலம் ஊக்கம் அளிப்பது பெரும் வருத்தம் ஏற்படுத்துகிறது.
கடந்த காங்கிரஸ் ஆட்சியில் ‘சிறுசேமிப்பு திட்டங்கள் பற்றி ஆராய அமைக்கப்பட்ட சியாமளா கோபிநாத் கமிட்டி, கிசான் விகாஸ் பத்திரங்கள், சட்டவிரோத பணபரிவர்த்தனைக்கும், நிதி பயங்கரவாதத்துக்கும் வழிவகுப்பதுடன், கருப்பு பணத்தையும் ஊக்குவிக்கும் என்று கூறியதால் அந்த கமிட்டியின் சிபாரிசுப்படி, கிசான் விகாஸ் பத்திரம் திட்டம் ரத்து செய்யப்பட்டது.
ஆனால், கருப்பு பணத்தையும், ஊழலையும் ஒழிக்கப்போவதாக பொய் வாக்குறுதிகளை அள்ளி வீசும் நரேந்திர மோடி அரசு, கிசான் விகாஸ் பத்திரத்தை மீண்டும் அறிமுகப்படுத்தியதன் மூலம் உள்நாட்டில் கருப்பு பணத்தை எப்படி ஒழிக்க போகிறது என மத்திய நிதி மந்திரி அருண் ஜெட்லியிடம் கேட்கிறேன். அப்படியானால், கருப்பு பணத்தை மீட்கப்போவதாக இதற்கு முன்பு அவர்கள் பேசியது எல்லாம் வெறும் பேச்சுதானா?மத்திய அரசின் இத்தகைய பின்வாங்கல்களை விளக்கி, ஒரு புத்தகம் வெளியிட உள்ளோம்.இவ்வாறு அவர் கூறினார்.