பா.ம.க. செயற்குழு கூட்டம் சென்னை அண்ணா கலையரங்கில் நேற்று நடந்தது. இந்த கூட்டத்தில் பாமக நிறுவனர் ராமதாஸ் உள்ளிட்ட கட்சி நிர்வாகிகள் அனைவரும் கலந்து கொண்டனர். இந்த கூட்டத்தில் பேசிய செயற்குழு உறுப்பினர்கள் பலர் அன்புமணி ராமதாசை பா.ம.க.வின் முதலமைச்சர் வேட்பாளராக அறிவித்து தேர்தலை சந்திக்க வேண்டும் என்றும், பா.ம.க. தலைமையில் கூட்டணி அமைய வேண்டும் என்றும் வலியுறுத்தினர்.
இறுதியில் பா.ம.க. நிறுவனர் ராமதாஸ் பேசும்போது, ”ஊழல் என்ற 3 எழுத்து தான் தமிழகத்தை ஆட்சி செய்கிறது. எங்கு பார்த்தாலும் ஊழல். முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா 4 ஆண்டுகள் சிறை தண்டனைக்கு உள்ளாகி இருக்கிறார். அவர் மீது இருந்த பல்வேறு வழக்குகள் அ.தி.மு.க. ஆட்சிக்காலத்தில் விசாரணையின்போதே கைவிடப்பட்டு இருக்கிறது. சில வழக்குகளில் மேல் முறையீட்டில் அவருக்கு விடுதலை கிடைத்து இருக்கிறது.
மணல் கொள்ளையில்அ.தி.மு.க.வும், தி.மு.க.வும் போட்டி போட்டு ஊழல் செய்து இருக்கிறது. பொதுப்பணித் துறை, நெடுஞ்சாலைத் துறை ஆகிய 2 துறைகள் தான் ஊழலின் ஊற்று. சத்துணவு அமைப்பாளர் பொறுப்புக்கு ரூ.2½ லட்சம், துணைவேந்தர் பதவிக்கு பல கோடி என்று வரையறை வைத்து கொள்ளையடிக்கிறார்கள். கட்டிடம் கட்டப்படுகிறது என்றால், சி.எம்.டி.ஏ.க்கு சதுர அடிக்கு ரூ.50 வழங்கப்பட வேண்டும்.
ரூ.1 லட்சத்து 60 ஆயிரம் கோடி பட்ஜெட்டில் ரூ.8 ஆயிரம் கோடி ஊழல் செய்கிறார்கள்.அ.தி.மு.க.விற்கு நாங்கள் ஊ.தி.மு.க. என்று பெயர் சூட்டுகிறோம். அதாவது, ஊழல் தி.மு.க. அ.தி.மு.க.வை குறை சொல்வதால் தி.மு.க.வுடன் கூட்டணியா? என்று கேட்பார்கள். இந்தியாவிலேயே ஊழலுக்கு என்று தனி விசாரணை கமிஷன் அமைத்தது தி.மு.க.வுக்கு மட்டும் தான்.
அதனால், இந்த இரண்டு ஊழல் கட்சிகளுமே நாம் தள்ளி வைக்க வேண்டும். அதற்கான நேரம் நெருங்கி வந்திருக்கிறது. 2016ல் பா.ம.க. ஆட்சி அமையும். இதை நம்மை தவிர வேறு யார் சொன்னாலும் அது வெற்று கோஷமாக தான் இருக்கும். அதற்கு அனைவரும் பாடுபட வேண்டும்” என்றார்.