அனைத்து தரப்பு மக்களுக்கும் காப்பீடு அளிக்க புதிய திட்டத்தை ஜனவரி மாதத்தில் அமல்படுத்த மத்திய அரசு திட்டமிட்டுள்ளது. நாட்டில் உள்ள அனைத்து மக்களுக்கும் சுகாதார காப்பீடு அளிப்பதை மத்திய அரசு நோக்கமாக கொண்டுள்ளது. அதன்படி அனைவருக்குமான தேசிய சுகாதார உறுதி திட்டத்தை செயல்படுத்து வது குறித்து வரையறை செய்ய சுகாதார அமைச்சகத்தை பிரதமர் அலுவலகம் கடந்த வாரம் கேட்டுக்கொண்டது. தற்போது மத்திய அரசு ராஷ்டிரீய ஸ்வஸ்திய பீமா யோஜனாவை (ஆர்எஸ்பிஒய்) செயல்படுத்தி வருகிறது. இதில் புதிய அம்சங்களை சேர்த்து அனைவருக்கும் காப்பீடு கிடைக்கும் வகையில் வரையறைகளை மாற்றம் செய்து புதிய திட்டத்தை செயல்படுத்த உள்ளதாக அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.
வறுமை கோட்டுக்கு கீழ் உள்ளவர்கள் பயன்பெறும் வகையில் ஆர்எஸ்பிஒய்ஐ தொழிலாளர் அமைச்சகம் நிர்வகித்து வருகிறது. முதற்கட்டமாக இந்த திட்டம் தேசிய சுகாதார உறுதி திட்டத்தின் ஒரு பகுதியாக செயல்படுத்தப்பட உள்ளது. பின்பு இரண்டையும் இணைத்து ஒரே திட்டமாக செயல்படுத்தப்படும். இன்னும் மூன்று ஆண்டுகளில் இந்த பணிகள் முடிவுறும் என சம்பந்தப்பட்ட வட்டாரங்கள் தெரிவித்தன.அனைவருக்குமான காப்பீடு திட்டம் 50 அத்தியாவசிய மருந்துகள், முக்கிய பரிசோதனைகள், ஆயுர்வேதம், ஹோமியோபதி உட்பட 30 மாற்று மருந்துகளை சலுகை விலையில் பெற வழிவகுக்கும். இவை ஏழைகளுக்கு இலவசமாக கிடைக்கும். மற்றவர்கள் சிறு தொகையை செலுத்தி சலுகை கட்டணத்தில் சிகிச்சை பெறலாம். முக்கிய மருத்துவ கருவிகளை குறைந்த விலையில் பெறமுடியும். ஆர்எஸ்பிஒய்ஐ 2008ம் ஆண்டு ஏப்ரலில் ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசு அறிமுகப்படுத்தியது.