அமெரிக்காவின் பாதுகாப்பு அமைச்சர் சக் ஹேகல் நேற்று தன்னுடைய அமைச்சர் பதவியை திடீரென ராஜிநாமா செய்தார். இதனால் அந்நாட்டில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
அமெரிக்காவின் நாடாளுமன்ற செனட் சபையில் ஆளும் ஜனநாயகக் கட்சி சமீபத்தில் மெஜாரிட்டியை இழந்தது. அதுமட்டுமின்றி உலகையே அச்சுறுத்தி வரும் ஐ.எஸ்.ஐ.எஸ் பயங்கரவாத அமைப்பைச் சமாளிப்பதில் ஒபாமா நிர்வாகம் திணறி வருவதாக கூறப்பட்டு வருகிறது. இந்த நெருக்கடியான சூழ்நிலையில் பாதுகாப்புத்துறை அமைச்சர் ஹேகலின் ராஜிநாமா அனைவருக்கும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
நேற்று அவர் தனது ராஜிநாமா கடிதத்தை ஒபாமாவிடம் சமர்ப்பித்ததாகவும், தனக்குப் பதிலாக புதிய பாதுகாப்பு அமைச்சர் நியமிக்கப்படும் வரை பதவியில் தொடர ஒப்புக் கொண்டுள்ளதாகவும் அமெரிக்க அரசு அதிகாரிகள் தெரிவித்தனர்.
இந்த தகவலை முதன்முதலாக அமெரிக்காவின் பிரபல ஊடகமான “நியூயார்க் டைம்ஸ்’ பத்திரிகை வெளியிட்டது. சில உலகளாவிய நெருக்கடிகள், குறிப்பாக ஐ.எஸ். அமைப்பின் எழுச்சி போன்றவற்றால் ஹேகல் மீது அதிபர் ஒபாமா அதிருப்தியடைந்து இருந்ததாகவும் அந்தப் பத்திரிகை தெரிவித்திருந்தது. பாதுகாப்பு துறை அமைச்சரின் திடீர் ராஜினாமாவால் ஒபாமா அரசுக்கு திடீர் நெருக்கடி ஏற்பட்டுள்ளது.