எட்டு ஆசிய நாடுகளின் தலைவர்கள் கலந்து கொண்ட சார்க் உச்சி மாநாடு நேற்று நேபாள தலைநகர் காண்ட்மண்டுவில் தொடங்கியது. இந்த மாநாட்டில் பாரத பிரதமர் நரேந்திர மோடி கலந்துகொண்டார். இந்த கூட்டத்தில் அவர் பாகிஸ்தான் பிரதமர் நவாஸ் ஷெரீப்பை சந்திக்கக்கூடும் என்று எதிர்பார்த்த நிலையில் இரு தலைவர்களுக்கும் இடையே முறை சார்ந்த சந்திப்புகள் எதுவும் நடைபெறவில்லை.
பிரதமர் நரேந்திர மோடிக்கு அளிக்கப்பட்ட இருக்கையில் இருந்து இரண்டு இருக்கைகள் அருகே பாகிஸ்தான் பிரதமர் நவாஸ் ஷெரீப் அமர்திருந்தாலும் இருவருக்கும் இடையே கைக்குலுக்குதல் போன்ற வழக்கமான நடைமுறை கூட பின்பற்றப்படவில்லை. இரு தலைவர்களுக்கும் நடுவில் மாலத்தீவு மற்றும் நேபாள நாட்டுத் தலைவர்கள் உட்கார்ந்திருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது. சுமார் 3 மணி நேரம் நடைபெற்ற இந்த மாநாட்டில் மோடி, நவாஸ் ஷெரிப் ஆகியஇரு தலைவர்களும் ஒருவரை ஒருவர் பார்த்துக்கொள்ளக்கூட இல்லை.
எல்லையில் பயங்கரவாதம் உள்பட பல விஷயங்களில் பாகிஸ்தான் இந்தியாவுக்கு தொடர்ந்து துரோகம் செய்து வருவதால் இனி பாகிஸ்தானுடன் சமாதானப்பேச்சுக்கு இடமில்லை என்று இந்திய அரசு முடிவு எடுத்துள்ளதாகவே இந்த சம்பவம் நடந்துள்ளதாக அரசியல் வல்லுனர்கள் கருத்து கூறியுள்ளனர்.