நேற்று முன் தினம் நடைபெற்ற ஆஸ்திரேலிய முதல்தர கிரிக்கெட் போட்டி ஒன்றில் தலையில் பலமாக அடிபட்டதால் படு காயமடைந்த கிரிக்கெட் வீரர் பிலிப் ஹியூக்ஸ் சிகிச்சை பலனின்றி இன்று பரிதாபமாக உயிரிழந்தார். அவரது மரண செய்தியை கேட்டு அவருக்கு பந்து வீசிய ஷான் அபாட் கடும் அதிர்ச்சியடைந்துள்ளார். அவருக்கு உடனடியாக கவுன்சிலிங் கொடுக்க ஆஸ்திரேலியா கிரிக்கெட் போர்டு முடிவடைந்துள்ளது.
நேற்று முன் தினம் நியூ சவுத் வேல்ஸ் நகரில் நடைபெற்ற ஆஸ்திரேலிய கிரிக்கெட் போட்டியில் வேகப்பந்து வீச்சாளர் ஷான் அபாட் வீசிய பந்து, பிலிப்பின் தலையை பதம் பார்த்தது. இதனால் படுகாயமடைந்து நிலை குலைந்து கீழே விழுந்த ஹியூக்ஸ் உடனடியாக கோமா நிலைக்கு சென்றார். அவருக்கு சிட்னி மருத்துவமனையில் இன்று அறுவை சிகிச்சை செய்ய திட்டமிடப்பட்டிருந்தது. இந்நிலையில் கோமாவில் இருந்த ஹியூக்ஸ் சிகிச்சை பலனின்றி சற்று முன்னர்உயிரிழந்ததாக மருத்துவமனை வட்டாரம் அறிவித்துள்ளது.
25 வயதேயான பிலிப் ஹியூக்ஸ் ஆஸ்திரேலிய அணிக்காக 26 டெஸ்ட் போட்டிகளிலும், 25 ஒரு நாள் போட்டிகளிலும் விளையாடி உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. பிலிப் ஹியூக்ஸின் மரணம் கிரிக்கெட் உலகை மட்டுமல்லாமல், விளையாட்டு உலகையும் உலுக்கியுள்ளது. ரசிகர்கள் சோகமடைந்துள்ளனர். பல நாட்டு வீரர்கள் ஹியூக்ஸுக்கு புகழாரம் சூட்டி வருகின்றனர். இந்நிலையில் ஹியூக்ஸ் அணிந்திருந்த ஹெல்மெட்டின் மோசமான வடிவமைப்புதான் அவருடைய உயிரிழப்பிற்கு முக்கிய காரணம் என்றும் சில தகவல்கள் வெளியாகியுள்ளது. இன்னும் இரு தினங்களில் ஹியூக்ஸின் பிறந்தநாள் என்பது குறிப்பிடத்தக்கது