சுருட்டப்பள்ளி :பள்ளிக்கொண்டீஸ்வரர் திருக்கோயில், சித்தூர்

writter-3(1)

தல சிறப்பு:

எங்குமே காணமுடியாத கோலத்தில் சிவன் பள்ளி கொண்ட நிலை. இங்கு அனைத்து தெய்வங்களும் தம்பதி சமேதராக அருள்பாலிப்பது தனி சிறப்பாகும். பள்ளி கொண்ட ஈஸ்வரன் – சர்வ மங்களாம்பிகை, வால்மீகிஸ்வரர் – மரகதாம்பிகை, விநாயகர் – சித்தி, புத்தி, சாஸ்தா – பூரணை, புஷ்கலை, குபேரன் – கவுரிதேவி, சங்கநிதி மற்றும் பதுமநிதி தன் மனைவியருடன் இப்படி அனைவரும் தத்தம் மனைவியருடன் அருள்பாலிக்கின்றனர்.

பொது தகவல்:

தெட்சிணாமூர்த்தி இத்தலத்தில் தான் தன் மனைவி தாராவுடன் தம்பதி சமேதராக அருள்பாலிக்கிறார். வியாழக்கிழமைகளில் இவரை வழிபட்டால் இரட்டிப்பு பலன் கிடைக்கும். பிரகாரத்தில் விநாயர், முருகன், பிருகு முனிவர், பிரம்மா, விஷ்ணு, மார்க்கண்டேயர், நாரதர், சந்திரன், குபேரன், சூரியன், சப்தரிஷிகள், இந்திரன் வீற்றிருக்கிறார்கள்.

பிரார்த்தனை :

பிரதோஷ பூஜை தோன்றுவதற்கு மூலகாரணமாக இருந்த தலமே சுருட்டப்பள்ளிதான். இவ்வுலகை காப்பதற்காக அமிர்தத்தை கொடுத்து விட்டு விஷத்தை உண்ட இந்த பள்ளிகொண்ட நாதனை சனிக்கிழமைகளில் வரும் மகாபிரதோஷ தினத்தில் வழிபட்டால் இழந்த செல்வம் மீண்டும் கிடைக்கும்.பதவியிழந்தவர்கள் மீண்டும் அடைவர், பதவி உயர்வு கிடைக்கும், திருமணத்தடை விலகும், பிரிந்த தம்பதியினர் ஒன்று சேருவர் என்பது நம்பிக்கை.

12

தலபெருமை:

மூலவரை வால்மீகிஸ்வரர் என்கிறார்கள். இவருக்கு எதிரில் ராமலிங்கம் உள்ளது. இந்த சன்னதிக்கு வெளியே துவார பாலகருக்கு பதில் சங்கநிதியும், பதுமநிதியும் உள்ளனர். அம்மன் மரகதாம்பிகை சன்னதிக்கு வெளியில் துவார பாலகியருக்கு பதில் பாற்கடலிலிருந்து கிடைத்த காமதேனுவும், கற்பகவிருட்சமும் உள்ளது.

தல வரலாறு:

துர்வாச மகரிஷியின் சாபத்தால் இந்திரலோக பதவியை இழந்தான் இந்திரன். அசுரர்கள் அவனது ராஜ்யத்தைப் பிடித்தனர். இழந்த பதவியை பெற வேண்டுமானால் பாற்கடலை கடைந்து, அமுதம் உண்டு பலம் பெற வேண்டும் என தேவகுரு பிரகஸ்பதி கூறினார்.

திருமாலின் உதவியுடன் வாசுகி என்ற பாம்பை கயிறாகவும், மந்திர மலையை மத்தாகவும் கொண்டு, தேவர்கள் ஒரு புறமும், அசுரர்கள் ஒரு புறமுமாக பாற்கடலை ஏகாதசி தினத்தில் கடைந்தனர். வாசுகி பாம்பு வலி தாங்காமல் விஷத்தை கக்கியது. தேவர்களும், அசுரர்களும் பயந்து இதிலிருந்து தங்களை காப்பாற்ற சிவனை வேண்டினர். சிவன் தன் நிழலில் தோன்றிய சுந்தரரை அனுப்பி அந்த விஷத்தை திரட்டி எடுத்து வர கூறினார். சுந்தரர் மொத்த விஷத்தையும் ஒரு நாவல் பழம் போல் திரட்டி சிவனிடம் தந்தார். அப்போது முப்பத்து முக்கோடி தேவர்களும், “”சிவபெருமானே! இந்த விஷத்தை வெளியில் வீசினாலும், தாங்களே உண்டாலும் அனைத்து ஜீவராசிகளும் அழியும். இந்த இக்கட்டான சூழ்நிலையிலிருந்து எங்களை காத்திடுங்கள்”என மன்றாடினார்.

 உடனே சிவன் “விஷாபகரண மூர்த்தி’யாகி அந்த கொடிய நஞ்சினை விழுங்கினார். இதைக்கண்டு பயந்த லோகமாதா பார்வதி, சிவனை தன் மடியில் கிடத்தி அவரது  வாயிலிருந்த விஷம் கழுத்தினை விட்டு செல்லாதவாறு கண்டத்தில் கைவைத்து அழுத்தினாள். இதனால் சிவனின் கழுத்தில் நீலநிறத்தில் விஷம் தங்கியது. அவர் “நீலகண்டன்’ ஆனார். விஷத்தை தடுத்து அமுதம் கிடைக்கச் செய்ததால் அம்மன் “அமுதாம்பிகை’ ஆனாள். பிறகு சிவன் பார்வதியுடன் கைலாயம் சென்றார். அப்படி செல்லும் வழியில் இத்தலத்தில் சற்று இளைப்பாறியதாக சிவபுராணத்திலும், ஸ்கந்த புராணத்திலும் கூறப்படுகிறது. பார்வதியின் மடியில் படுத்து ஓய்வெடுத்தார். இந்த அருட்காட்சியை சுருட்டப்பள்ளியில் பார்க்கலாம்.

சுவாமி பள்ளி கொண்டிருப்பதால், “பள்ளி கொண்டீஸ்வரர்’ எனப்படுகிறார். பிரதோஷ காலத்தில் இத்தலத்து ஈசனை வழிபட்டால் சகல சவுபாக்கியங்களும் கிடைக்கும் என்பது நம்பிக்கை.

3

 சிறப்பம்சம்:

அதிசயத்தின் அடிப்படையில்: எங்குமே காணமுடியாத கோலத்தில் சிவன் பள்ளி கொண்ட நிலை.

Leave a Reply