இங்கு ஆஞ்சநேயர் 18 அடி உயரமும் , கையில் ஜெபமாலையுடனும், இடுப்பில் கத்தியுடனும் அருள்பாலிக்கிறார்.
தலபெருமை:
குடவறை நரசிம்மர்: இது ஒரு குடவறை சிற்பம். கூரிய நகங்களுடன் இருக்கும் இவர், இரணியனை சம்ஹாரம் செய்ததன் அடையாளமாக உள்ளங்கையில் ரத்தக் கறையுடன் காட்சி தருவது கலியுக அதிசயம். அருகில் சனகர், சனாதனர், சூரியன், சந்திரன் மற்றும் பிரம்மா உள்ளனர். நரசிம்மர் குடவறை மூர்த்தி என்பதால், திருமஞ்சனம் கிடையாது. உற்சவருக்கே திருமஞ்சனம் நடக்கிறது.
தாயார் சிறப்பு: நரசிம்மரின் மடியில் லட்சுமி இருந்தால், “லட்சுமி நரசிம்மர்’ என்றழைக்கப் படுவார். ஆனால், லட்சுமி இவரது மடியில் இல்லாமல், மார்பில் இருக்கிறாள். நாமகிரி தாயார் பிரகாரத்தில் கிழக்கு நோக்கி இருக்கிறாள். இவளை வணங்கிட, கணிதத்தில் புலமை பெறலாம் என்பது நம்பிக்கை.
பக்த ஆஞ்சநேயர்: சாளக்ராமத்தைக் கொண்டு வந்த ஆஞ்சநேயருக்கு நரசிம்மர் கோயில் எதிரே தனிக்கோயில் இருக்கிறது. 18 அடி உயரமுள்ள இவர், கையில் ஜெபமாலையும், இடுப்பில் கத்தியும் வைத்திருக்கிறார்.
தல வரலாறு:
ஒருசமயம் கண்டகி நதியில் (நேபாளத்தில் உள்ளது) ஆஞ்சநேயர் நீராடியபோது, ஒரு சாளக்ராமம் (திருமாலின் வடிவமாக கருதப்படும் புனிதமான கல்) கிடைத்தது. அதை பூஜைக்காக எடுத்துக்கொண்டு வான் வழியே பறந்து வந்தார். இத்தலத்தில் நீராடுவதற்காக இறங்கிய அவர், கமல தீர்த்தத்தைக் கண்டார். சாளக்ராமத்தை கீழே வைக்க முடியாது என்பதால் என்ன செய்வதென யோசித்த வேளையில், தீர்த்தக்கரையில் மகாலட்சுமி தாயார், தவமிருப்பதைக் கண்டார்.
அவளை வணங்கிய ஆஞ்சநேயர், அவளது தவத்திற்கான காரணத்தைக் கேட்டார். திருமாலை, நரசிம்ம வடிவில் தான் பார்த்ததில்லை என்றும், அந்த வடிவத்தைக் காண தான் தவமிருப்பதாகவும் கூறினாள். ஆஞ்சநேயர், அவளது கையில் சாளக்ராமத்தைக் கொடுத்து, நீராடிவிட்டு, வந்து வாங்கிக் கொள்வதாக சொன்னார்.குறிப்பிட்ட நேரத்துக்குள் வந்து வாங்கிக் கொள்ளாவிட்டால், சாளக்ராமத்தை தரையில் வைத்துவிடுவேன் என லட்சுமி நிபந்தனை விதித்தாள். ஆஞ்சநேயருக்கு சில காரணங்களால் தாமதமாகி விட்டது.
தாயார், சாளக்ராமத்தை கீழே வைத்து விட்டாள். தாமதமாக வந்த ஆஞ்சநேயர், சாளக்ராமத்தை எடுக்க முயன்றார். ஆனால், முடியவில்லை. அது பெரிய மலையாக உருவெடுத்தது. அம்மலையில், நரசிம்மர் தோன்றி, தாயாருக்கு அருள் செய்தார். இவர் “லட்சுமி நரசிம்மர்’ எனப்பட்டார். ஆஞ்சநேயரும் இங்கேயே தங்கி விட்டார்.
சிறப்பம்சம்:
அதிசயத்தின் அடிப்படையில்: இங்கு ஆஞ்சநேயர் 18 அடி உயரமும் , கையில் ஜெபமாலையுடனும், இடுப்பில் கத்தியுடனும் அருள்பாலிக்கிறார்.