ஆங்கில புத்தாண்டான ஜனவரி 1-ம் தேதியும் வைகுண்ட ஏகாதசியும் ஒரே நாளில் வருவதால், அன்றைய தினம் சிபாரிசு கடிதங்கள் மற்றும் முன்பதிவுகளை ரத்து செய்ய திருப்பதி தேவஸ்தானம் முடிவு செய்துள்ளது.
திருமலையில் தேவஸ்தான அனைத்து துறை அதிகாரிகளின் ஆலோசனைக்கூட்டம் நேற்று திருமலை-திருப்பதி தேவஸ்தான இணை நிர்வாக அதிகாரி ஸ்ரீநிவாச ராஜு அவர்கள் தலைமையில் அன்னமய்யா பவனில் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் ஒருசில முக்கிய முடிவுகள் எடுக்கப்பட்டுள்ளது.
வரும் ஜனவரி 1ஆம் தேதியும், வைகுண்ட ஏகாதேசியும் ஒரே நாளில் வருவதால், பக்தர்கள் கூட்டம் அதிகமாக இருக்கும் என்றும் அதற்கான முன்னேற்பாடுகள் குறித்து ஆலோசனை செய்யப்பட்டது. புத்தாண்டு தினத்தில் 19 மணி நேரமும், மறுநாள் துவாதசியன்று 18 மணி நேரமும் பக்தர்கள் தரிசனம் செய்ய அனுமதிக்க முடிவு செய்யப்பட்டது. மேலும் அன்றைய தினம் தங்குமிடம், தரிசனம் ஆகியவற்றுக்கு சிபாரிசு கடிதங்களை அனுமதிப்பதில்லை என்றும் முன்பதிவுகளை ரத்து செய்வது என்றும் முடிவு செய்யப்பட்டது.
மேலும் 24 மணி நேரமும் பக்தர்களுக்கு தேவையான போக்குவரத்து வசதி, குடிநீர், உணவு, பாதுகாப்பு போன்ற அனைத்து வசதிகளிலும் எந்தவித குறைபாடும் இன்றி ஏற்பாடுகள் செய்ய வேண்டுமென அதிகாரிகளுக்கு உத்தரவிடப்பட்டது. மேலும் தடையின்றி லட்டு பிரசாதம் வழங்கவும் நடவடிக்கை எடுக்க உத்தரவிடப்பட்டது.