சிபிஐ இயக்குநர் பதவியில் இருந்து ரஞ்சித் சின்ஹா நேற்று ஓய்வு பெற்றதை அடுத்து புதிய சிபிஐ இயக்குனராக பிகார் மாநிலத்தைச் சேர்ந்த மூத்த ஐ.பி.எஸ். அதிகாரி அனில் குமார் சின்ஹா நியமனம் செய்யப்பட்டுள்ளார்.
பிரதமர் மோடி தலைமையில், தலைமை நீதிபதி, எதிர்கட்சித் தலைவர் ஆகிய மூவர் அடங்கிய நியமனக் குழு அனில் குமார் பெயரை நேற்று முறைப்படி அறிவித்தது. 40 பேர்களின் பெயர் இந்த பதவிக்காக பரிசீலனை செய்யப்பட்டதாகவும், அவர்களில் அனில்குமாரை இந்த குழு தேர்வு செய்ததாகவும் கூறப்படுகிறது.
1979ஆம் ஆண்டு ஐ.பி.எஸ். அதிகாரியாக பிகாரில் பணியை தொடங்கிய அனில் குமார் சின்ஹா, பல்வேறு பதவிகளில் வகித்த பின்னர் தற்போது சிபிஐயின் புதிய இயக்குனராக பதவி பெற்றுள்ளார். இவர் அடுத்த இரண்டு ஆண்டுகளுக்கு இந்த பதவியில் தொடருவார்.
இந்நிலையில் புதுடில்லியில் உள்ள சிபிஐ தலைமை அலுவலகத்தில் நேற்று ஓய்வு பெற்ர ரஞ்சித் சின்ஹாவுக்கு பிரியாவிடை அளிக்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. இரண்டு ஆண்டுகள் இந்த பணியில் இருந்த இவர் மீது அண்மையில் 2ஜி, நிலக்கரிச் சுரங்க ஊழல்களில் தொடர்புடையவர்களை பாதுகாக்கும் முயற்சியில் ஈடுபட்டதாக குற்றம்சாட்டி பொதுநல வழக்குத் தொடரப்பட்டது. இந்த வழக்கை விசாரித்த உச்ச நீதிமன்றம், 2ஜி ஊழல் வழக்கு விசாரணையில் இருந்து விலகியிருக்கும்படி ரஞ்சித் சின்ஹாவுக்கு உத்தரவிட்டிருந்தது.