சென்னையில் இயங்கி வரும் மின்சார ரெயில்களில் விளம்பர நோட்டீஸ் ஒட்டுபவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று தெற்கு ரெயில்வே எச்சரித்துள்ளது. இதுகுறித்து நேற்று தெற்கு ரெயில்வே வெளியிட்டுள்ள அறிக்கை ஒன்றில்:
சென்னை எழும்பூர், மூர்மார்க்கெட் காம்ப்ளக்ஸ், ஆவடி, கும்மிடிப்பூண்டி, தாம்பரம், பரங்கிமலை உள்ளிட்ட ரெயில் நிலையங்களில் மின்சார ரெயில்களில் நோட்டீசுகள், துண்டு பிரசுரங்கள் ஒட்டும் நபர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. இந்த வருடம் இதுவரை மின்சார ரெயில்களில் விதிமுறையை மீறி விளம்பர நோட்டீசுகள், துண்டு பிரசுரங்கள் ஒட்டியதாக 325 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். மேலும் அவர்களிடம் இருந்து ரூ. 1,08,000 அபராதம் வசூலிக்கப்பட்டுள்ளது.
மின்சார ரெயில்களில் விளம்பர நோட்டீசுகள், துண்டு பிரசுரங்கள் ஒட்டுவதை தடுக்க ரெயில்வே பாதுகாப்பு படை தனிக்குழு ஒன்று அமைக்கப்பட்டு தீவிர நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. கடந்த மாதம் 30-ந்தேதி பல்வேறு ரெயில்நிலையங்களில் நடத்திய திடீர் சோதனையில் மட்டும் 9 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். இவர்களில் 2 பேர் விளம்பர நோட்டீசில் ஒட்டியிருந்த நிறுவனத்தின் உரிமையாளர்கள் என்பது குறிப்பிடதக்கது.
இதுதவிர ரெயில் பெட்டிகளில் ஒட்டப்படும் நோட்டீசுகளில் இடம்பெறும் செல்போன் எண், முகவரி, நோட்டீசு ஒட்டிய வேலையாட்களிடம் விசாரணை உள்ளிட்ட சரியான ஆதாரங்களை திரட்டி நோட்டீசில் குறிப்பிடப்படும் கம்பெனிகள், நிறுவனங்கள் மீதும் வரும் காலங்களில் கடும் நடவடிக்கை எடுக்கப்படும்.
இவ்வாறு அந்த செய்தி குறிப்பில் கூறப்பட்டு உள்ளது.