ஜெயலலிதா முதலமைச்சராக பதவி வகித்தபோது சட்டமன்றப் பேரவையில், சட்டமன்றப் பேரவை விதி 110-ன் கீழ் வெளியிடப்பட்ட அறிவிப்புகள் மீது எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என மு.க. ஸ்டாலின் கூறிய குற்றச்சாட்டை மறுத்து, சட்டப்பேரவையில் முதலமைச்சர் ஓ. பன்னீர் செல்வம் அது தொடர்பான விளக்க அறிக்கை ஒன்றை வாசித்தார்.
இது தொடர்பாக தமிழக சட்டப்பேரவையில் இன்று முதலமைச்சர் ஓ. பன்னீர் செல்வம் பேசியதாவது:
மக்கள் முதல்வர் மாண்புமிகு அம்மா அவர்களால் சட்டமன்றப் பேரவையில், சட்டமன்றப் பேரவை விதி 110-ன் கீழ் வெளியிடப்பட்ட அறிவிப்புகள் மீது எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என ஒரு பொய்யான குற்றச்சாட்டை தி.மு.க.வினர் அடிக்கடி எழுப்பி வருகின்றனர். அதிலும், குறிப்பாக சட்டமன்ற தி.மு.க. குழுவின் தலைவர் மு.க.ஸ்டாலின், கடந்த நாடாளுமன்றத் தேர்தலின் போதே, 110 விதியின் கீழ் செய்யப்பட்ட அறிவிப்புகள் மீது எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என ஒரு உண்மைக்கு மாறான பிரச்சாரத்தை மேற்கொண்டார்.
2011-12 ஆம் ஆண்டு விதி எண் 110-ன் கீழ், 51 திட்டங்களை புரட்சித் தலைவி அம்மா அவர்கள் அறிவித்தார்கள். இதில் 51 திட்டங்களுக்கும் அரசாணைகள் வெளியிடப்பட்டு, 39 திட்டங்கள் முடிக்கப்பட்டுள்ளன. 11 திட்டங்கள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன. நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளதால் ஒரு திட்டம் எடுத்துக் கொள்ளப்படவில்லை.
2012-13 ஆம் ஆண்டு, விதி எண் 110-ன் கீழ், 87திட்டங்களை புரட்சித் தலைவி அம்மா அவர்கள் அறிவித்தார்கள். இதில் 83 திட்டங்களுக்கு அரசாணைகள் வெளியிடப்பட்டு, 48 திட்டங்கள் முடிக்கப்பட்டுள்ளன. 34 திட்டங்கள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன. நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளதால் ஒரு திட்டம் எடுத்துக் கொள்ளப்படவில்லை. மீதமுள்ள 4 திட்டங்கள் மத்திய அரசிடம் நிலுவையில் உள்ளன.
2013-14 ஆம் ஆண்டு, விதி எண் 110-ன் கீழ், 292 திட்டங்களை அறிவித்தார்கள். இதில் 287 திட்டங்களுக்கு அரசாணைகள் வெளியிடப்பட்டு, 126 திட்டங்கள் முடிக்கப்பட்டுள்ளன. 161 திட்டங்கள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன. ஒரு திட்டம் மத்திய அரசிடம் நிலுவையில் உள்ளது. 4 திட்டங்களுக்கு அரசாணை வெளியிடப்பட வேண்டி உள்ளது.
2014-15 ஆம் ஆண்டு, விதி எண் 110-ன் கீழ் 236 திட்டங்களை புரட்சித் தலைவி அம்மா அவர்கள் அறிவித்தார்கள். இதில் 116 திட்டங்களுக்கு அரசாணைகள் வெளியிடப்பட்டு,
5 திட்டங்கள் முடிக்கப்பட்டுள்ளன. 111 திட்டங்கள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன.
3 திட்டங்கள் மத்திய அரசிடம் நிலுவையில் உள்ளன. 117 திட்டங்களுக்கு அரசாணை வெளியிடப்பட வேண்டி உள்ளது. நிறைவேற்றப்பட்ட திட்டங்களில், சிலவற்றை இந்த அவையில் எடுத்துக் கூற விரும்புகிறேன்.
இவ்வாறு கூறிய பன்னீர் செல்வம், பேரவை விதி 110-ன் கீழ் வெளியிடப்பட்ட அறிவிப்புகளில் எவையெல்லாம் நிறைவேற்றப்பட்டுள்ளன என்பது குறித்த நீண்ட நெடிய அறிக்கை ஒன்றை வாசித்தார்.