ஹரியானா மாநிலத்தில் கடந்த ஒரு வாரத்திற்கு முன்னர் ஓடும் பஸ்சில் தொல்லை கொடுத்த இரண்டு வாலிபர்களை அடித்து உதைத்த சகோதரிகள் குறித்து பெரும் பரபரப்புடன் செய்திகள் வந்த நிலையில் அவர்களுக்கு ரொக்கப்பரிசு மற்றும் மாநில விருதும் அளிக்கவிருப்பதாக அறிவிக்கப்பட்டது. ஆனால் அந்த இரு சகோதரிகள் மீது திடீரென புகார்கள் எழுந்துள்ளதால், அவர்களுக்கு அறிவித்திருந்த ரொக்கப்பரிசு மற்றும் விருதை மாநில அரசு நிறுத்தி வைத்து உள்ளது.
ஹரியானாவில் உள்ள ரோதக் நகரில் அமைந்துள்ள கல்லூரி மாணவிகளான பூஜா மற்றும் ஆர்த்தி ஆகிய சகோதரிகள் கடந்த 28ஆம்தேதி அரசு பஸ்சில் சென்று கொண்டிருந்தபோது குல்தீப், மோகித் மற்றும் தீபக் ஆகிய 3 வாலிபர்கள் செக்ஸ் தொல்லை கொடுத்ததாக தெரிகிறது. இதனால் கடும் ஆத்திரமடைந்த சகோதரிகள் இருவரும், அந்த 3 வாலிபர்களையும் அடித்து, உதைத்தனர். அதன்பின்னர் அந்த 3 வாலிபர்களும் போலீஸார் வசம் ஒப்படைக்கப்பட்டனர். அவர்கள் மீது பல்வேறு பிரிவுகளில் வழக்கு பதிவு செய்யப்பட்டு உள்ளது.
இந்நிலையில் செக்ஸ் தொல்லை கொடுத்தவர்களை வீரத்துடன் அடித்து விரட்டியதாக அந்த இளம்பெண்களுக்கு பாராட்டுகள் குவிந்ததோடு, சகோதரிகள் இருவரின் வீரதீர செயலை பாராட்டிய ஹரியானா முதலமைச்சர் மனோகர் லால் கட்டார், குடியரசு தினவிழாவின் போது அவர்கள் இருவரும் ரொக்கப்பரிசு மற்றும் விருது வழங்கி கெளரவிவிக்கப்படுவார்கள் என அறிவித்தார்.
இந்த விவகாரத்தில் திடீர் திருப்பமாக, அந்த 3 வாலிபர்களுக்கு ஆதரவாகவும், இளம்பெண்களுக்கு எதிராகவும் ஏராளமானோர் போலீசில் ஆஜராகி வாக்குமூலங்கள் கொடுத்து வருகிறார்கள்.
அதன்படி இந்த நிகழ்ச்சி ஊடகங்களில் வெளிவந்த உடனேயே, அந்த பஸ்சில் பயணம் செய்த 4 பெண்கள் சதர் போலீஸ் நிலையத்துக்கு சென்று, அந்த வாலிபர்கள் இளம்பெண்களுக்கு எந்த தொந்தரவும் கொடுக்கவில்லை என வாக்குமூலம் அளித்தனர்.
கெட்ட குணம் படைத்தவர்கள்
சம்பவத்தின் போது அந்த பஸ்சில் பயணம் செய்த மேலும் 2 பேர் போலீசில் ஆஜராகி, அந்த வாலிபர்களுக்கு ஆதரவாக வாக்குமூலம் அளித்து உள்ளனர். இது குறித்து பிம்லா என்ற பெண் பயணி ஒருவர் கூறும்போது, ‘இருக்கை பிடிப்பது தொடர்பாக நடந்த சண்டைதான் அது. அந்த பெண்களிடம் 3 வாலிபர்களும் ஒரு வார்த்தைக்கூட பேசவில்லை. அந்த 2 பெண்களும் கெட்ட குணம் படைத்தவர்கள்’ என்று தெரிவித்தார். இதனால் ஹரியானாவில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.