எனக்கு இரவில் தூக்கம் சரியாக வருவது இல்லை. இடையிடையே எழுந்துகொள்கிறேன். இரவில் எவ்வளவு சீக்கிரமாகத் தூங்கப்போனாலும், காலையில் லேட்டாகவே எழுகிறேன். அன்றைக்கு நாள் முழுவதும் புத்துணர்ச்சியாக இருப்பது இல்லை. ரொம்ப சோர்வாகவே இருக்கிறது. இதற்கு என்ன தீர்வு? தூக்க மாத்திரை எடுத்துக்கொண்டால் சரியாகிவிடுமா?’
‘இதற்குத் தீர்வு மாத்திரைகளில் இல்லை. வாழ்க்கைமுறையில் மேற்கொள்ளும் மாற்றங்களினால் மட்டுமே தீர்வு கிடைக்கும். பொதுவாக, இரவு அரை வயிற்றுக்கு மேல் சாப்பிடக்கூடாது. வயிறு புடைக்கச் சாப்பிடுவது அஜீரணக் கோளாறுகளுக்கு வழிவகுக்கும். அதனால், தூங்குவது தடைப்படும். தூங்குவதற்கு இரண்டு மணி நேரத்துக்கு முன்பு, சாப்பிட்டுவிட வேண்டும். காபி, குளிர்பானங்களை எடுத்துக்கொள்ளக் கூடாது. படுக்கை அறையை, தூங்குவதற்கு மட்டுமே பயன்படுத்த வேண்டும். படுத்துக்கொண்டு புத்தகம் படிப்பது, தொலைக்காட்சி பார்ப்பது போன்றவற்றைத் தவிர்க்கவேண்டும். மதிய உணவுக்குப் பிறகு தூங்குவதை முற்றிலும் தவிர்க்கவேண்டும்.
மின்னணுக் கருவிகளைப் பயன்படுத்துவதை, தூங்குவதற்கு சிறிது நேரம் முன்பாகவே நிறுத்த வேண்டும். குறிப்பாக மொபைலை இரவு தூங்கச் செல்வதற்கு அரை மணிநேரம் முன்பே தூர வைத்துவிட வேண்டும். தூங்கப்போகும் முன் மெசேஜ் செய்வது, சமூக இணையதளங்களில் வலம் வருவது, ஹெட்போனில் பாட்டுக் கேட்பது போன்றவற்றை அறவே தவிர்க்கவேண்டும். புகையிலைப் பெருட்களை மெல்லுவது, புகைபிடிப்பது, ஆல்கஹால் அருந்துவது அறவே கூடாது. தினமும் குறிப்பிட்ட நேரம் தூங்கி, எழுந்திருக்கும் பழக்கத்தை மேற்கொள்ளுங்கள். இந்த மாற்றங்கள் செய்தும், நிம்மதியான தூக்கம் வரவில்லை எனில், உங்கள் குடும்ப மருத்துவர் அல்லது தூக்கமின்மைக்கான சிறப்பு நிபுணரை அணுகி ஆலோசனை பெறுங்கள்.’