ஜம்மு-காஷ்மீர் மாநிலத்தில் நேற்று தீவிரவாதிகள் நடத்திய தாக்குதல் சம்பவத்துக்கு பிரதமர் நரேந்திர மோடி கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக பிரதமர் தனது டுவிட்டர் சமூக வலைப்பக்கத்தில் அவர் வெளியிட்ட பதிவுகளில் தெரிவித்திருப்பதாவது:
ஜம்மு-காஷ்மீரில் நடைபெற்றுள்ள தாக்குதல்களை கண்டிக்கிறேன். தேர்தலுக்குச் சாதகமான சூழ்நிலையையும், அதிக வாக்குகள் பதிவாகியுள்ளதால் ஏற்பட்டுள்ள நற்பெயரையும் சீர்குலைக்கும் முயற்சியாகவே இந்தத் தாக்குதல்கள் நடத்தப்பட்டுள்ளன.
தீவிரவாதிகளின் தாக்குதல்களில் உயிரிழந்த பாதுகாப்புப் படையினருக்கு, நாட்டில் உள்ள 125 கோடி இந்தியர்களும் தங்களது சிரம் தாழ்த்தி மரியாதை செலுத்திக் கொள்கிறோம். தேசத்துக்காக அவர்கள் வாழ்ந்தனர்; தேசத்துக்காக அவர்கள் உயிரிழந்துள்ளனர். அவர்களை நாம் மறக்க முடியாது எனத் தெரிவித்துள்ளார்.
“திட்டமிட்டபடி காஷ்மீருக்கு மோடி பயணம்’: ஜம்மு-காஷ்மீர் சட்டப்பேரவைத் தேர்தலையொட்டி, பாஜக வேட்பாளர்களை ஆதரித்து காஷ்மீர் பள்ளத்தாக்குப் பகுதியில் பிரதமர் நரேந்திர மோடி திங்கள்கிழமை பிரசாரம் செய்ய திட்டமிட்டுள்ளார். காஷ்மீரில் தீவிரவாதிகள் தாக்குதல் நடத்தியிருப்பதால், அவரது பயணம் திட்டமிட்டபடி நûற்டபெறுமா? எனக் கேள்வியெழுந்தது.
இதுகுறித்து பிரதமர் அலுவலக வட்டாரங்கள் தெரிவிக்கையில், “திட்டமிட்டபடி, காஷ்மீருக்கு மோடி செல்வார்’ எனத் தெரிவித்தன.