ரூபாய் நோட்டில் தேசத்தந்தை மகாத்மா காந்தி உருவப்படத்தை தவிர வேறு எந்த தலைவர்களின் உருவப்படமும் இடம் பெறக்கூடாது என மத்திய அரசிடம் ரிசர்வ் வங்கி அறிவித்டிருப்பதாக மத்திய நிதி அமைச்சர் அருண்ஜெட்லி தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து பாராளுமன்றத்தில் நேற்று கேள்வி ஒன்றுக்கு பதிலளித்த அமைச்சர் அருண்ஜெட்லி “மத்திய அரசின் அறிவுரையின் பேரில், ரூபாய் நோட்டு வடிமைப்பு குறித்து ஆய்வு செய்வதற்காக ரிசர்வ் வங்கி கடந்த 2010ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் குழு ஒன்று அமைத்தது. இந்த குழு கவனத்துடன் ஆய்வு செய்த பிறகு, ரூபாய் நோட்டில் மகாத்மா காந்தி உருவப்படத்தை தவிர வேறு எந்த தேசிய தலைவர்களின் உருவப்படமும் இடம் பெறக்கூடாது. அவரது உருவப்படம் மட்டுமே இந்திய நாட்டை பிரதிபலிக்க கூடியதாக இருக்கும் என்று மத்திய அரசிடம் தெரிவித்துள்ளது” என்று கூறியுள்ளார்.
இதைத் தொடர்ந்து, கேள்வி ஒன்றுக்கு பதில் அளித்து பேசுகையில், ஏடிஎம் மிஷின்களில் பணம் எடுக்கும் போது கள்ளநோட்டுகள் வருவதாக ரிசர்வ் வங்கிக்கு புகார்கள் வந்தது. கடந்த 3 ஆண்டுகளில் 21 புகார்கள் வந்துள்ளது. இது தொடர்பாக, உரிய நடவடிக்கை எடுக்கும்படி வங்கிகளுக்கு ரிசர்வ் வங்கி அறிவுறுத்தியுள்ளது’ என்றார்.