என்.டி.ராமராவ் பேரன் கார் விபத்தில் பலி. சந்திரபாபு நாயுடு குடும்பத்துடன் அஞ்சலி செலுத்தினார்.

janagiramanமுன்னாள் ஆந்திர முதல்வர் என்.டி.ராமராவ் பேரனும், தெலுங்கு சினிமா தயாரிப்பாளருமான ஜானகிராம் கார் விபத்தில் பரிதாபமாக பலியானார். அவருடைய உடலுக்கு ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு குடும்பத்துடன் நேரில் சென்று அஞ்சலி செலுத்தினார்.

பிரபல நடிகரும், ஆந்திர மாநில முன்னாள் முதல்வருமான என்.டி.ராமராவின் மகன் ஹரிகிருஷ்ணா. இவருடைய மகன் ஜானகிராம் தெலுங்கு திரைப்பட தயாரிப்பாளராக இருந்தார். இவர் நேற்று முன் தினம் மாலை 6.30 மணி அளவில் ஐதராபாத்தில் இருந்து விஜயவாடாவுக்கு தனது காரில் சென்று கொண்டிக்கும்போது நல்கொண்டா மாவட்டம் முனதால மண்டலம் ஆகுபாமுலா என்ற இடத்தில் இவருடைய கார் டிராக்டர் ஒன்றின் மீது பயங்கரமாக மோதியது. மோதிய வேகத்தில் ஜானகிராமன் சென்ற  கார் 3 குட்டிக்கரணம் அடித்து 100 மீட்டர் தூரத்தில் உள்ள பள்ளத்தில் கவிழ்ந்தது.

காரில் இருந்த ஜானகிராமுக்கு தலை, முதுகு ஆகிய இடங்களில் பலத்த காயம் ஏற்பட்டது. உடனே அந்த வழியாக மற்றொரு காரில் வந்தவர்கள் ஜானகிராமை கோடாடா பகுதியில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு, அவரை பரிசோதித்த மருத்துவர்கள், அவர் ஏற்கனவே இறந்துவிட்டதாக தெரிவித்தனர்.

இந்த தகவலை கேட்டதும் அவரது தந்தை ஹரிகிருஷ்ணா மயங்கி விழுந்தார். ஜானகிராமின் சகோதரர்கள் கல்யாண்ராம், ஜூனியர் என்.டி.ஆர். ஆகியோர் ஜானகிராம் வீட்டுக்கு விரைந்தனர். ஹரிகிருஷ்ணாவின் மைத்துனரும், ஆந்திர மாநில முதல்வருமான சந்திரபாபு நாயுடு தகவல் கேட்டு அதிர்ச்சி அடைந்தார். உடனே அவர் தனது குடும்பத்துடன் ஜானகிராம் வீட்டுக்கு வந்து அஞ்சலி செலுத்தினார்.

தெலுங்கானா மாநில முதல்-மந்திரி சந்திரசேகர்ராவ், ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் தலைவர் ஜெகன்மோகன் ரெட்டி உள்பட பலர் இரங்கல் தெரிவித்துள்ளனர். ஜானகிராமுக்கு தீபிகா என்ற மனைவியும், நந்தமூரி காரேக்ராம், நந்தமூரி சவுமித்ரா என்ற 2 மகன்களும் உள்ளனர்.

Leave a Reply