ஆண்களும் ஜாக்கிரதை!
‘ஆஸ்டியோபொரோசிஸா… அதெல்லாம் பொம்பிளைங்க பிரச்னை…’ என நினைத்தால், ரொம்பவே ஸாரி! எலும்புகளை வலுவிழக்கச் செய்து, ஸ்பாஞ்ச் மாதிரி மென்மையாக்கக் கூடிய இந்தப் பிரச்னை, பெண்களை மட்டுமல்ல… இப்போது ஆண்களையும் பெருமளவு தாக்க ஆரம்பித்திருக்கிறது. காரணம் என்ன? தாக்கத்திலிருந்து தப்பிக்க முடியுமா?
‘‘ஆஸ்டியோபொரோசிஸ் என்னும் குறைபாட்டுக்கு தமிழில் ‘எலும்புப் புரை நோய்’ என்று பெயர். எலும்பின் அடர்த்தியான உள்கட்டமைப்பில் நெருங்கிய வலை போன்ற தோற்றம் உருவாகி, அடர்த்தியை இழத்தலே எலும்புப் புரையாகும். எலும்பில் திடத்தன்மை குறைவதால் கீழே தவறி விழுந்தால் கூட எலும்புமுறிவு ஏற்படும். இக்குறைபாடு அதிகமானால் குனிந்தாலோ, தும்மினாலோ கூட முதுகின் தண்டு எலும்புகள் நசுங்கி முறிவு ஏற்பட வாய்ப்புள்ளது. பொதுவாக பெண்களையே அதிகமாக பாதிக்கும் ஆஸ்டியோபொரோ சிஸ், மாதவிடாய் நின்ற பின் அல்லது சினைப்பையை அறுவைசிகிச்சை மூலம் அகற்றுவது, 40 வயதுக்கு முன் நிற்கும் மாதவிடாய் ஆகிய காரணங்களால் வருகிறது.
ஆண்களிலும் ஐந்தில் ஒருவர் எலும்புப் புரையினால் பாதிக்கப்படுகிறார்கள். ஆண்களுக்கு மூத்திரக்காய் புற்றுநோயை (prostate cancer) விட எலும்புப் புரை நோய் அதிகமாக வருகிறது. இந்தப் பிரச்னை உள்ள 20 சதவிகிதம் ஆண்கள் மருத்துவரைஅணுகுவதே இல்லை. ஸ்டீராய்டு மருந்துகள், மனநோய் மருந்து கள், வலிப்பு நோய் மருந்துகள் போன்றவற்றை 3 மாதங்களுக்கு மேல் பயன்படுத்தி னால், எலும்பில் அடர்த்திக் குறைவு ஏற்படும். கீழ்வாதம் உடையோர் (Rheumatoid), நெஞ்சு கரித்தல் மருந்துகளையும் வயிற்றுப்புண்ணை குறைக்கும் மாத்திரைகளையும் உட்கொள்வோர் ஆகியோரும் எலும்புப் புரையால் தாக்கப்படுகின்றனர். தினமும் குறைந்தது 20 முதல் 40 நிமிடம் வரை உடற்பயிற்சி செய்ய வேண்டும்.
நமது உடலின் எடையை தாங்கும் குதிகால்களை உயர்த்துதல் மற்றும் குதித்தல் போன்ற பயிற்சிகளை செய்ய வேண்டும். மெதுவோட்டம் அல்லது ஓடிவிளையாடுதல் எலும்புகளை திடமாக்கும். சூரிய ஒளி நமது உடலில் படும்படி 10 நிமிடமாவது – குறிப்பாக நண்பகல் 11 மணி முதல் 1 மணிக்குள் நிற்க வேண்டும். கால்சியம் அதிகம் உடைய கேழ்வரகு, வாழைப்பழம், கீரைகள், முட்டைகோஸ், பிராக்கோலி, தயிர், மோர், மீன், இறால், ஆட்டு ஈரல் போன்றவற்றை சேர்த்துக் கொள்ள வேண்டும். வைட்டமின் டியும் அவசியம். அது கதிரவனின் கதிர்களிலும் இறைச்சியிலுமே அதிகம்.கேன், பாட்டில்களில் அடைக்கப்பட்ட குளிர்பானங்களில் உள்ள வாயு எலும்புப் புரையை ஏற்படுத்தக் கூடும். புகைப்பிடித்தல், மது அருந்துதல் போன்றவையும் எலும்பின் திடத்துக்கு தீங்கு விளைவிக்கும்.
எலும்புத் தாது அடர்த்தி (Bone mineral density) என்ற ஊடுகதிர் ஆய்வு செய்தோ, ரத்தத்தில் வைட்டமின் டியை ஆய்வு செய்தோ, எலும்புப் புரை அல்லது அடர்த்திக் குறைவினை கண்டுபிடிக்கலாம். எலும்பின் திடத்தை அதிகரிக்கும் கால்சியம் மாத்திரைகள், வைட்டமின் டி ஆகியவற்றை தூள் வடிவில் பாலில் கலந்து குடிக்கலாம். இயன்முறை வல்லுனரிடம் (Physiotherapist) போதிய பயிற்சிகள் எடுத்துக்கொள்வதும் அவசியம்..’’
‘‘இன்று 10 பேரை ஆராய்ந்தால் 8 பேருக்கு ஆஸ்டியோபொரோசிஸ் வருவதற்கான அறிகுறிகள் இருக்கின்றன. அவசர உணவு வகைகளை அதிகம் சாப்பிடுவது, மது, சிகரெட் பழக்கங்கள்.. இவை அனைத்தும் முக்கிய காரணங்கள். பெண்களுக்கு ஈஸ்ட்ரோஜன் ஹார்மோன் குறைபாடு ஏற்படுவதால் ஆஸ்டியோபொரோசிஸ் எளிதாக வரும். பெண்களின் உடலில் கால்சியம், வைட்டமின் டி அளவை சரியாக வைத்திருப்பதில் ஈஸ்ட்ரோஜன் ஹார்மோனுக்கு முக்கிய பங்கு உண்டு. கால்சியம், வைட்டமின் டி குறைபாடு தவிர, காபியில் உள்ள கஃபைன் என்ற வேதிப்பொருள் அதிக மாவதன் காரணமாகவும் இது ஏற்படலாம். மன உளைச்சல் காரணமாக கார்டிசோன் எனப்படும் கெட்ட ஹார்மோன் சுரப்பதும் எலும்புகளின் அடர்த்தியை பாதிக்கும்.
நிறைய பேர் கால்சியம் மாத்திரைகளை எடுத்துக்கொள்வார்கள். வைட்டமின் டி போதுமான அளவில் இருந்தால்தான் கால்சியத்தை உடல் உள்வாங்கும். அதனால், வைட்டமின் டி அளவை சரியாக வைத்திருப்பதும் முக்கியம். காளான், வெண்ணெய், சீஸ் போன்ற பால் பொருட்களைஉட்கொள்வது நல்லது. வயது காரணமாகவும் ஆஸ்டியோபொரோசிஸ் ஏற்படும். இடுப்பு எலும்பும் முதுகு தண்டுவட எலும்பும் மிக அதிகமாக முறிவுக்கு உள்ளாகும். அறுவை சிகிச்சை மூலம் எளிதாக இந்த முறிவுகளை சரி செய்ய முடியும்.
டெக்ஸா ஸ்கேன் (Dexa scan) முறையில் எந்த எலும்புகளில் ஆஸ்டியோபொரோசிஸ் உள்ளது என்பதை துல்லியமாக கண்டறிய முடியும். மைக்ரோ கம்ப்ரஷன் ஃபிராக்சர் என்ற வகை எலும்புமுறிவு, முதுகுத் தண்டுவட எலும்புகளில் ஆஸ்டியோபொரோசிஸ் தாக்கினால் ஏற்படும். இது எக்ஸ்-ரேயில் கூட தெரியாது. இந்தப் பிரச்னையை கால்சியம், வைட்டமின் டி மாத்திரைகள் கொடுத்து சரி செய்ய முடியும். தாதுச்சத்து அதிகம் உள்ள பசலைக்கீரை, பருப்பு வகைகளை அதிகமாக உணவில் சேர்த்துக் கொள்வதும் முக்கியமானதாகும்…’’