வழுக்கைத்தலை பாதிப்புக்குள்ளான இளைஞர்களுக்கு 5 மாத காலத்தில் மீளவும் கேசத்தை வளரச் செய்யும் மாத்திரையொன்றை விருத்தி செய்துள்ளதாக அமெரிக்க விஞ்ஞானிகள் உரிமை கோரியுள்ளனர்.மேற்படி மாத்திரையை 5 மாத காலத்திற்கு நாளொன்றுக்கு இரு தடவை உள்ளெடுத்தால் போதும் என நியூயார்க் நகரிலுள்ள கொலம்பிய பல்கலைக்கழக மருத்துவ நிலையத்தைச் சேர்ந்த விஞ்ஞானிகள் தெரிவிக்கின்றனர்.
மேற்படி, வழுக்கை நிலையானது நிர்ப்பீடண முறைமையில் ஏற்படும் பிரச்சினையால் மயிர்ப்புடைப்புக்களிலுள்ள கலங்கள் அழிக்கப்படுவதால் ஏற்படுகிறது. இந்நிலையில் இந்த மயிர்ப்புடைப்புகளை அழிக்கும் ரி.கல நிர்ப்பீடண கலங்கள் எனும் கலங்களை இனங்கண்ட விஞ்ஞானிகள் ஆரம்பக்கட்டமாக எலிகளில் அந்த கலங்களின் செயற்பாட்டை நிறுத்துவதற்கான பரிசோதனைகளை மேற்கொண்டு வெற்றி கொண்டுள்ளனர்.
அதன்பின் தம்மால் வழுக்கைத் தலையை குணப்படுத்துவதற்கு தயார் செய்யப்பட்ட மருந்தான ரக்ஸோலிரினிப்பை முழுமையாக வழுக்கைத்தலை பாதிப்புக்குள்ளான மூன்று ஆண்களுக்கு பரீட்சார்த்தமாக வழங்கியுள்ளனர்.
இந்நிலையில் அந்த மருந்தை தினசரி இரு தடவைகள் ஒரு மாத்திரை வீதம் வழங்கப்பட்டதையடுத்து அவர்கள் மூவருக்கும் 4 மாதங்கள் முதல் 5 மாதங்களுக்கு இடைப்பட்ட காலத்தில் கேசம் முழுமையாக வளர்ச்சியடைந்துள்ளது. இந்த மருந்தானது 15 வயது முதல் 29 வயது வரையான காலத்தில் வழுக்கைத் தலைக்குள்ளானவர்களுக்கே உரிய பலனைத் தந்து கேசத்தை மீள வளரச் செய்யக்கூடியதாகும்.
ஆனால் வயது மற்றும் பாலியல் ஹோர்மோனான டெஸ்ரொஸ்திரோன் காரணமாக ஏற்பட்ட வழுக்கைத் தலை பாதிப்பை இந்த மருந்தின் மூலம் குணப்படுத்துவது சாத்தியமற்றது என கருதப்படுகிறது. இந்நிலையில் மேற்படி மருந்தின் பாதுகாப்பு குறித்து உறுதிப்படுத்துவதற்கு விஞ்ஞானிகள் தொடர்ந்து ஆய்வுகளை முன்னெடுத்து வருகின்றனர்.