நேற்று இலங்கை அதிபர் ராஜபக்சே திருப்பதி வந்திருந்தபோது அவரை படம் பிடிக்க முயன்ற தமிழக பத்திரிக்கையாளர்கள் தாக்கப்பட்டதற்கு கண்டனம் தெரிவித்து புதுச்சேரியில் உள்ள ஆந்திர வங்கிக்கு பூட்டு போடும் போராட்டம் நடந்தது. இதனால் புதுச்சேரியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
நேற்று திருப்பதியில் சாமி தரிசனம் செய்ய வந்த இலங்கை அதிபர் ராஜபக்சேவின் வருகையை எதிர்த்து மதிமுகவினர் போராட்டம் நடத்தினர். இந்த நிகழ்ச்சியையும், ராஜபக்சேவையும் படம் பிடிக்க தமிழகத்தில் இருந்து முக்கிய ஊடகங்கள் திருப்பதியில் குவிந்தன. ராஜபக்சே சாமி கும்பிட்டுவிட்டு கோவில் இருந்து வெளியே வரும்போது படம் பிடிக்க முயன்ற தமிழக பத்திரிக்கையாளர்களை ஆந்திர போலீசார் கடுமையாக தாக்கி கைது செய்ததோடு அவர்களுடைய கேமராவை உடைத்தனர்..
இந்நிலையில் பத்திரிக்கையாளர்கள் மீதான தாக்குதலை கண்டித்து புதுச்சேரியில் தமிழக வாழ்வுரிமைக் கட்சி, மக்கள் உரிமைக் கூட்டமைப்பு, தமிழர் களம் ஆகிய பல்வேறு தமிழ் அமைப்புகள் போராட்டம் நடத்தினர்.
அப்போது புதுச்சேரியில் செயல்பட்டு வரும் ஆந்திரா வங்கிக் கிளைக்கு பூட்டு போட்டு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இதில் பத்திரிக்கையாளர்கள் மீது கொலைவெறித் தாக்குதல் நடத்திய ஆந்திர போலீசார் மீது மனித உரிமை ஆணையம் விசாரணை நடத்தி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும், கைது செய்யப்பட்ட பத்திரிக்கையாளர்களை உடனே விடுதலை செய்ய வேண்டும் என்று கோஷங்கள் எழுப்பினர்.