இலங்கை அதிபர் ராஜபக்சே அமைச்சரவையில் இருந்து இரண்டு அமைச்சர்கள் திடீரென விலகியதால் அவருடைய அமைச்சரவை பெரும்பான்மையை இழந்தது. இதனால் இலங்கை அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
மூன்றாவது முறையாக இலங்கை அதிபர் தேர்தலில் போட்டியிட உள்ள ராஜபக்சே கடந்த சில நாட்களாக எதிர்க்கட்சிகளை உடைக்கும் முயற்சியில் ஈடுபட்டிருந்தார். இந்நிலையில் அவருடைய அமைச்சரவையில் இருந்த தமிழகக் கட்சிகளைச் சேர்ந்த 2 அமைச்சர்கள் நேற்று திடீரென ராஜினாமா செய்தனர். ஏற்கனவே ராஜபக்சே அமைச்சரவையில் 2வது இடத்தில் இருந்த மைத்ரிபால சிறியசேனா அவரை எதிர்த்து அதிபர் தேர்தலில் போட்டியிடும் இக்கட்டான நிலையில் இந்த இரண்டு அமைச்சர்களின் ராஜினாமா அவரை அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது.
பதவி விலகி இரன்டு அமைச்சர்களான பழனி திகம்பரம், ராதாகிருஷ்ணன் ஆகிய இருவரும் இந்திய வம்சாவளித் தமிழர்கள் என்பது குறிப்பிடத்தக்கது. தமிழ் மக்களின் கோரிக்கைகளை ராஜபக்சே நிறைவேற்றத் தவறிவிட்டதாகவும், ராஜபக்சே மக்கள் எதிர்ப்பு கொள்கையை கடைபிடிப்பதாகவு அவர்கள் குற்றம்சாட்டி உள்ளனர். எனவே ஜனவரி 8 ஆம் தேதி நடைபெறவுள்ள அதிபர் தேர்தலில், எதிர்க்கட்சி வேட்பாளர் மைத்ரிபால சிறியசேனாவை ஆதரிக்கப் போவதாக அவர்கள் இருவரும் தெரிவித்துள்ளனர்.
இரண்டு தமிழ் அமைச்சர்களின் விலகலால், இலங்கை நாடாளுமன்றத்தில் மூன்றில் இரண்டு பங்கு பெரும்பான்மையை ராஜபக்சேவின் அரசு இழந்துள்ளது. இதனால் இலங்கையில் நெருக்கடி ஏற்பட்டுள்ளது.