புகைப்பட பகிர்வு சேவையான இன்ஸ்டாகிராம் 300 மில்லியன் பயனாளிகள் எனும் மைல்கல்லை எட்டி குறும்பதிவு சேவையான டிவிட்டரை முந்தியிருப்பதாக அறிவித்துள்ளது.
சமூக வலைப்பின்னல் தளங்களில் ஃபேஸ்புக் மற்றும் டிவிட்டர் உள்ளிட்ட சேவைகள் முன்னிலை வகிக்கின்றன. பேஸ்புக் மாதந்தோறும் 1.35 பில்லியன் பயனாளிகளுடன் முன்னணிலையில் உள்ளது. டிவிட்டர் மாதந்தோறும் 284 மில்லியன் பயனாளிகளுடன் இரண்டாவது இடத்தில் உள்ளது.
ஸ்மார்ட்போன்கள் மூலம் புகைப்படங்களை பகிர்வதற்கான பிரபலமான செயலியாக இருக்கும் இன்ஸ்டாகிராம் இப்போது 300 மில்லியன் பயனாளிகளுடன் டிவிட்டரை முந்தியிருப்பதாக அறிவித்துள்ளது.
இன்ஸ்டாகிராம் சி.இ.ஓ கெவின் சிஸ்ட்ராம் இந்த அறிவிப்பை வெளியிட்டிருக்கிறார். இன்ஸ்டாகிராம் என்பது உலகின் தற்போதைய நாடித்துடிப்பை அறிய உதவும் சேவை என்று அவர் கூறியுள்ளார்.
புகைப்பட பகிர்வு செயலியில் பிரபலமானதாக இருக்கும் இன்ஸ்டாகிராம் கடந்த 2012 ம் ஆண்டு ஃபேஸ்புக்கால் வாங்கப்பட்டது குறிப்பிடத்தக்கது. இந்த சேவை 2010ல் கெவின் சிஸ்ட்ராம் மற்றும் மைக் கிரைகரால் துவக்கப்பட்டது.
பயனாளிகள் எண்ணிக்கையில் புதிய மைல்கல்லை எட்டியுள்ள நிலையில் இன்ஸ்டாகிராம் புதிய வசதியையும் அறிமுகம் செய்துள்ளது. டிவிட்டர் மற்றும் ஃபேஸ்புக்கில் இருப்பது போன்ற பயனாளிகளுக்கான சரிபார்க்கப்பட்ட அதிகாரப்பூர்வ கணக்கு வசதியை அறிமுகம் செய்துள்ளது. இதன் மூலம் இன்ஸ்டாகிராம் சேவையை பயன்படுத்தும் பிரபலங்கள் மற்றும் நட்சத்திரங்களின் கணக்கு அதிகாரப்பூர்வமானது என்பது நீல நிற டிக் மூலம் உறுதிபடுத்தப்படும். இன்ஸ்டாகிராம் சேவையை தொடர்ந்து பயன்படுத்தும் வழக்கமான பயனாளிகளுக்கும் இந்த வசதி பொருந்தும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இன்ஸ்டாகிராம் மேலும் பல புதிய வசதிகளை அறிமுகம் செய்யவும் திட்டமிட்டுள்ளது.
இதனிடையே இன்ஸ்டாகிராம் தலைமை அதிகாரி கெவின் சிஸ்ட்ராம் மற்றும் அதன் தாய் நிறுவனமான ஃபேஸ்புக் நிறுவனர் மார்க் ஜக்கர்பர்க் இந்த மைல்கல்லை புதுமையான முறையில் கொண்டாடியுள்ளனர்.
அவர்கள் இருவரும் இன்ஸ்டாகிராமின் கிராவிட்டி அறையில் தலைகீழாக இருப்பது போன்ற புகைப்படத்தை இன்ஸ்டாகிராம் மூலம் பகிர்ந்துள்ளனர்.
சமூக ஊடக பயன்பாட்டில் முனைப்புடன் இருக்கும் இந்திய பிரதமர் நரேந்திர மோடி சமீபத்தில் இண்ஸ்டாகிராமிலும் இணைந்தது குறிப்பிடத்தக்கது.