நேற்று தமிழக அரசு மின் கட்டணத்தை 15% உயர்த்துவதாக அறிவித்துள்ளது. இந்த அறிவிப்பு வெளியான சில நிமிடங்களிலேயே சென்னையில் உள்ள வீட்டு உரிமையாளர்கள் வாடகைக்கு குடியிருப்பவர்களிடம் தாறுமாறாக மின்கட்டணத்தை உயர்த்தியுள்ளதாகவும் இதனால் ஏழை எளிய நடுத்தர மக்கள் அதிர்ச்சி அடைந்துள்ளதாகவும் செய்திகள் கூறுகின்றது.
சென்னையில் ஏற்கனவே வாடகை வீடுகளில் ஒரு யூனிட்டுக்கு தற்போது 8 ரூபாய் முதல் 10 ருபாய் மின்சார கட்டணம் வசூலிக்கப்படுகிறது. இந்த கட்டணம் இடத்துக்கு இடம், வீட்டின் உரிமையாளர்களை பொறுத்து மாறுபடும்.
அரசு நிர்ணயித்ததை விட கூடுதலாக மின்கட்டணம் வசூலித்தால் அவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று மின்சார வாரியம் எச்சரிக்கை செய்திருந்தாலும் யாரும் வீட்டு உரிமையாளர்கள் மீது புகார் கொடுப்பதில்லை. காரணம் சென்னையில் வாடகைக்கு வீடு கிடைப்பது மிகவும் அரிதான விஷயம். இதனால் வீட்டின் உரிமையாளர்கள் நிர்ணயிக்கும் மின் கட்டணத்தை வேறுவழியின்றி வாடகைக்கு குடியிருப்பவர்கள் செலுத்தி வருகின்றனர்.
இந்நிலையில் தமிழ்நாடு மின்சார ஒழுங்குமுறை வாரியம் 15 சதவிகித மின்கட்டணத்தை உயர்த்தியுள்ளதால், வீட்டின் உரிமையாளர்களும் ஒரு யூனிட் 15 ரூபாய் வரை உயர்த்துவதாக வாடகைதாரர்களிடம் சொல்லி விட்டனர். இதனால் இனி சாதாரண குடும்பங்களில் மின்கட்டணத்துக்கு மட்டுமே சில ஆயிரங்களை ஒதுக்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது