குரூப் 4 தேர்வுக்கான நுழைவுச் சீட்டுகள் தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தின் இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது.
இதுகுறித்து தேர்வுக் கட்டுப்பாட்டு அலுவலர் சோபனா வெள்ளிக்கிழமை வெளியிட்ட அறிவிப்பு:
குரூப் 4 பிரிவில் 4 ஆயிரத்து 963 காலிப் பணியிடங்கள் உள்ளன. இந்தக் காலியிடங்களை நிரப்புவதற்கான தேர்வு வரும் 21-ஆம் தேதி நடைபெறுகிறது. இத் தேர்வினை எழுத 12.75 லட்சத்துக்கும் மேற்பட்டோர் விண்ணப்பித்துள்ளனர்.
சரியான முறையில் உரிய விண்ணப்பக் கட்டணம், தேர்வுக் கட்டணம் செலுத்திய விண்ணப்பதாரர்களுக்கு தேர்வுக்கூட நுழைவுச்சீட்டு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தின் இணையதளமான www.tnpscexams.net, www.tnpsc.gov.in-இல் வெளியிடப்பட்டுள்ளது.
தேர்வுக்கு விண்ணப்பித்த விண்ணப்பதாரர்கள் தங்களது விண்ணப்பப் பதிவு எண்ணை (Registration ID) இணையதளத்தில் பதிவு செய்து நுழைவுச்சீட்டினை பதிவிறக்கம் செய்யலாம்.
நுழைவுச்சீட்டு கிடைக்கப் பெறாத விண்ணப்பதாரர்கள், தங்களது விண்ணப்பம் நிராகரிக்கப்பட்டுள்ளதா என்பதை நிராகரிப்புப் பட்டியலில் (Rejection List) கண்டறியலாம்.
நிராகரிப்புப் பட்டியலில் இடம்பெறாத, சரியான முறையில் விண்ணப்பங்களைப் பதிவு செய்து, உரிய விண்ணப்பக் கட்டணம் செலுத்தியும் நுழைவுச்சீட்டு கிடைக்கப்பெறாத, தகுதியான விண்ணப்பதாரர்கள், தாங்கள் பணம் செலுத்தியதற்கான ரசீதின் (Challan) நகலுடன் கோரிக்கை கடிதத்தை தேர்வாணையத்தின் மின்னஞ்சல் முகவரியான contacttnpsc@gmail.com-க்கு, வரும் 17-ஆம் தேதிக்குள் அனுப்புமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.
விண்ணப்பதாரரின் பெயர், விண்ணப்பப் பதிவு எண் (Registration ID), விண்ணப்ப தேர்வுக் கட்டணம் (ரூபாய்), கட்டணம் செலுத்திய இடம், அஞ்சலகம், இந்தியன் வங்கிக் கிளை, அஞ்சலக முகவரி ஆகியவற்றை மின்னஞ்சலில் குறிப்பிடலாம்.
நுழைவுச் சீட்டினை பதிவிறக்கம் செய்வதில் ஏதேனும் சந்தேகம் இருப்பின் 1800 425 1002 என்ற கட்டணமில்லா தொலைபேசியிலோ அல்லது contacttnpsc@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரியிலோ தொடர்பு கொண்டு தெளிவு பெறலாம் என்று சோபனா தெரிவித்துள்ளார்.