இன்று சனிப்பெயர்ச்சி. திருநள்ளாறு ஸ்ரீசனீஸ்வரன் கோவிலில் சிறப்பு ஏற்பாடு.

saniசனிபகவான் இன்று துலாம் ராசியிலிருந்து விருச்சிக ராசிக்கு இடம்பெயர்வதால் திருநள்ளாறு ஸ்ரீ தர்பாரண்யேஸ்வரர் கோயிலில் இன்று வெகுசிறப்பாக சனிப்பெயர்ச்சி விழா நடைபெறுகிறது.

புதுச்சேரி யூனியன் பிரதேசத்தில்  காரைக்கால் மாவட்டம் திருநள்ளாறில் அமைந்துள்ள ஸ்ரீ தர்பாரண்யேஸ்வரர் கோயிலில் உள்ள மூலவர் ஸ்ரீ தர்பாரண்யேஸ்வரர், ஸ்ரீ சனீஸ்வரபகவான் பக்தர்களை ஈர்க்கும் தெய்வங்களாக அருள்பாலிக்கின்றன.

இரண்டரை ஆண்டுகளுக்கு ஒருமுறை நடைபெறும் சனிப்பெயர்ச்சி இன்று செவ்வாய்க்கிழமை பிற்பகல் 2.43 மணிக்குப் பெயர்ச்சியாகிறது. இந்த நேரத்தில் தனி சன்னதிகொண்டிருக்கும் ஸ்ரீ சனீஸ்வரபகவானுக்கு கருப்பு வஸ்திரம், தங்க கவசம் அணிவித்து மகா தீபாராதனை நடத்தப்பட்டு சனிவழிபாடு செய்யப்படுகிறது.

சனிப்பெயர்ச்சி விழாவையொட்டி இன்று காலை 4 மணிக்கு கோயில் நடை திறக்கப்படும் என்றும் பக்தர்கள் இன்று இரவு 12 மணி வரை தரிசனம் செய்யலாம் என்றும் கோயில் நிர்வாகம் தெரிவித்துள்ளது.
இன்று திருநள்ளாற்றில் லட்சக்கணக்கான பக்தர்கள் கூடுவார்கள் என எதிர்பார்க்கப்படுவதால், பாதுகாப்புப் பணிக்காக புதுச்சேரியிலிருந்து 1500 போலீசார் திருநள்ளாறில் நேற்று மாலை முதல் பாதுகாப்புப் பணியில் ஈடுபடத் தொடங்கினர்.

சனிப்பெயர்ச்சியையொட்டி சிறப்பு ரயிலை இயக்குவதாக தென்னக ரயில்வே தெரிவித்துள்ளது. இதுகுறித்து காரைக்குடி ரெயில்வே அதிகாரி ஒருவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் ‘திருச்சியிலிருந்து காரைக்காலுக்கு 56712 எண் கொண்ட ரயில் காலை 10 மணிக்குப் புறப்பட்டு பிற்பகல் 2.30 மணிக்கு காரைக்கால் வருவதாகவும், காரைக்காலில் இருந்து 56713 எண் கொண்ட ரயில் பிற்பகல் 3 மணிக்குப் புறப்பட்டு திருச்சி செல்லுமெனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Leave a Reply