சிலீப்பர் செல் என்ற வார்த்தையே ஏ.ஆர்.முருகதாஸின் ‘துப்பாக்கி’ படம் வந்தபின்னர் தான் பலரும் தெரிந்து கொண்டனர். இந்நிலையில் அசாம் மாநிலத்தில் சிலீப்பர் செல் உறுப்பினர்கள் பயிற்சி பெற்று வருவதாக அசாம் மாநில சட்டசபையில் திடுக்கிடும் தகவல் ஒன்று நேற்று தெரிவிக்கப்பட்டது.
அசாம் மாநிலத்தில் பல வருடங்களாக தீவிரவாத செயல்களில் ஈடுபட்டு வரும் ஜமாத்-உல்-முஜாஹிதீன் என்ற அமைப்பு தற்போது 20 சிலீப்பர் செல் உறுப்பினர்களுக்கு பயிற்சியளித்து வருவதாகவும் அவர்களில் 10 சிலீப்பர் செல்கள் மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில் தீவிரவாத செயல்களில் ஈடுபட தயார் நிலையில் இருப்பதாகவும் அசாம் மாநில மாநில சட்டசபையில் இன்று தெரிவிக்கப்பட்டு உள்ளது.
இது குறித்து அசாமின் சுற்று சூழல் மற்றும் வன துறை அமைச்சர் உசைன் அளித்துள்ள எழுத்துபூர்வமான பதிலில், ஜே.எம்.பி இயக்கத்தின் 10 பேர் தலைமறைவாக உள்ளதுடன் தீவிரமாக செயல்படும் நிலையில் உள்ளதாகவும் தகவல்கள் கிடைத்துள்ளன. மேற்கு வங்காளதேசத்தை சேர்ந்த இந்த இயக்கத்தின் தலைவர்கள் அசாமில் சிலருக்கு பயிற்சி அளித்துள்ளனர்.
வருங்காலத்தில் சிலீப்பர் செல்லாக செயல்பட தயாராகும்படி அவர்களிடம் இயக்கத்தின் தலைவர்கள் கூறியுள்ளனர். பயிற்சி பெற்றவர்களில் ஒரு பெண் உள்பட 10 பேரை பர்பேடா மற்றும் நல்பாரி மாவட்டங்களின் பல்வேறு பகுதிகளில் இருந்து அசாம் போலீசார் கைது செய்துள்ளனர். மீதமுள்ளவர்களையும் பிடிக்கும் பணியில் போலீசார் ஈடுபட்டுள்ளனர் என்று கூறியுள்ளார்.