ஆதார் அட்டை விவகாரம். ஓஎன்ஜிசி தலைவர் மீது சிவகாசி வழக்கறிஞர் வழக்கு.

ongc-logoவீட்டு உபயோகத்திற்கான சிலிண்டர் பதிவு செய்ய ஆதார் கார்டு கேட்கக் கூடாது என்று ஐகோர்ட் ஏற்கெனவே உத்தரவு பிறப்பித்துள்ள நிலையில் ஒருசில இடங்களில் ஆதார் கார்டு கேட்டு அதிகாரிகள் தொல்லை தருவதாக கூறி மத்திய பெட்ரோலிய துறை செயலர் மற்றும் ஓஎன்ஜிசி தலைவர் ஆகியோருக்கு எதிராக நீதிமன்ற அவமதிப்பு நடவடிக்கை எடுக்கக் கோரி, மனு ஒன்று மதுரை ஐகோர்ட் கிளையில் இன்று தாக்கல் செய்யப்பட்டது. சிவகாசியைச் சேர்ந்த வழக்கறிஞர் எஸ். ஆனந்தமுருகன் என்பவர் இந்த மனுவை தாக்கல் செய்துள்ளார். அந்த மனுவின் முழுவிபரம் வருமாறு:

அனைவருக்கும் ஆதார் கார்டு வழங்கும் வரை, அரசின் உதவிகளைப் பெறுவதற்கு ஆதார் கார்டை கட்டாய மாக்கவோ, ஆதார் கார்டு முறையை அமல்படுத்தவோ கூடாது என்று மத்திய அரசுக்கு உத்தரவிடக் கோரி 2013-ல் உயர் நீதிமன்ற மதுரைக் கிளையில் மனு தாக்கல் செய்தேன். மேலும், பழைய முறைப்படியே (ஆதார் கார்டு இல்லாமல்) இணைப்புதாரர்களுக்கு வீட்டு உபயோக சிலிண்டர் வழங்க கேஸ் நிறுவனங்களுக்கு உத்தரவிடவும் அந்த மனுவில் கேட்டிருந்தேன்.

இந்த மனு 23.1.2014 அன்று முதல் அமர்வில் விசாரணைக்கு வந்தபோது, ‘ஆதார் கார்டு விவகாரத்தில் உச்ச நீதிமன்றம் இறுதி முடிவெடுக்கும் வரை மானிய விலை கேஸ் சிலிண்டர் பெறுவதற்கு இணைப்புதாரர்களிடம் ஆதார் கார்டு கேட்கக் கூடாது’ என்று கேஸ் நிறுவனங்களுக்கு நீதிபதிகள் உத்தரவிட்டனர். அதன்பிறகு ஆதார் கார்டு இல்லாமல் மானிய விலை சிலிண்டர்கள் வழங்கப்பட்டன.

இந்நிலையில், 2015, ஜனவரி 1 முதல் மானிய விலை சிலிண்டர் மற்றும் புதிய கேஸ் இணைப்பு பெறுவதற்கு வங்கிக் கணக்கு எண்ணுடன், ஆதார் கார்டு நகலை டிசம்பர் 31-க்குள் அளிக்க வேண்டும் என்று செல்போன்களுக்கு கேஸ் நிறுவனங்கள் குறுந்தகவல்கள் அனுப்பி வருகின்றன. தவறினால், மானிய விலையில் வீட்டு உபயோக கேஸ் சிலிண்டர் பெற முடியாது என்று கூறப்படுகிறது.

உயர் நீதிமன்றம் ஏற்கெனவே உத்தரவிட்டுள்ள நிலையில், மீண்டும் ஆதார் கார்டு கேட்பது நீதிமன்ற அவமதிப்பாகும். எனவே, மத்திய பெட்ரோலியம் மற்றும் இயற்கை எரிவாயுத் துறை செயலர் சவுரவ் சந்திரா, இந்திய எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயு கழகத் தலைவர் தினேஷ் கே. சராப் ஆகியோர் மீது நீதிமன்ற அவமதிப்பு நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்’ என்று அந்த மனுவில் குறிப்பிடப்பட்டிருந்தது.

இந்த மனு நீதிபதிகள் வி. தனபாலன், வி.எம். வேலுமணி ஆகியோர் முன் நேற்று விசாரணைக்கு வந்தது. விசாரணையை டிசம்பர் 22-க்கு நீதிபதிகள் ஒத்திவைத்தனர்.

Leave a Reply