வட இந்தியாவில் கிறிஸ்துவர்கள் மற்றும் முஸ்லீம்கள் கட்டாய மதமாற்றம் செய்யப்படுவது குறித்த விவகாரம் தொடர்பாக மாநிலங்களவையில் தொடர்ந்து மூன்று நாளாக எதிர்க்கட்சி உறுப்பினர்கள் அமளியில் ஈடுபட்டு வருகின்றனர். இதனால், அவை நடவடிக்கைகள் இன்றும் நாள் முழுவதும் ஒத்திவைக்கப்பட்டது.
கட்டாய மதமாற்ற விவகாரம் குறித்து நாடாளுமன்றத்தில் பிரதமர் நரேந்திர மோடி விளக்கமளிக்க வேண்டும் என எதிர்க்கட்சியினர் வற்புறுத்தியுள்ளனர்.
நேற்று காலை, மாநிலங்களவை கூடியவுடன் இவ்விவகாரத்தை சமாஜ்வாதி எம்.பி. நரேஷ் அகர்வால் எழுப்பினார். அவர் பேசியதாவது, “மத்திய அமைச்சர்களை முடிவு செய்வது பிரதமர்தான். அதனால் அமைச்சர்கள் செய்யும் தவறுக்கு பிரதமரே பொறுப்பாவார். அமைச்சர்கள் சர்ச்சைக்குரிய கருத்தை வெளியிட்டால் அதற்கு பிரதமரே பொறுப்பேற்று விளக்கமளிக்க வேண்டும்” என்றார்.
சமாஜ்வாதி எம்.பி.யின் குற்றச்சாட்டை மறுத்த மத்திய அமைச்சர் அருண் ஜேட்லி, அவ்வாறு எந்த ஒரு முடிவும் பாஜக நாடாளுமன்றக் குழு கூட்டத்தில் எடுக்கப்படவில்லை என்றார்.