சிரஞ்ஜீவி அஸ்வத்தாமா!

26-1416985368-5--aswatthama-and-arjuna  பூதவுடல் அகன்றாலும் புகழுடன் நிரந்தரமாக இருப்பவர்களை சிரஞ்ஜீவீ என்பார்கள் அப்படி, ஏழு சிரஞ்ஜீவிகளில் முதலாமவன் அஸ்வத்தாமா ! 60-ஆம் கல்யாண வைபவத்தில், அஸ்வத்தாமானை வணங்குவது உண்டு. தனது தவத்தால் ஈசனை மகிழ்வித்த துரோணாச்சார்யர், இறையருள் அம்சத்துடன் இணைந்த மகனைப் பெற்றார். அவன் தான் அஸ்வத்தாமா. இவன் பிறந்ததும், உச்சை : ஸ்ரீ அவஸ்ஸீ என்ற தேவலோக குதிரையின் சத்தம் போன்ற ஒலியை எழுப்பியதால், அஸ்வத்தாமா எனப் பெயர் அமைந்ததாம் ! சக்தியின் அளவை, குதிரை வேகத்துக்கு ஒப்பிடுவார்கள், அல்லவா ?! போர்க்களத்தில் குதிரைபோல் செயல்படும் தகுதி கொண்டவன், இவன். வேதம் ஓதும் பரம்பரை, ஆயுதம் ஏந்தாது. அரசாணை காரணமாக அஸ்திரத்தை ஏந்தினான் அஸ்வத்தாமா. ஸ்ரீமந் நாராயணரின் அருளால், நாராயண அஸ்திரத்தை அஸ்வத்தாமாவுக்கு வழங்கினார் துரோணர். அத்துடன், இதனை தற்காப்புக்கு மட்டுமே பயன்படுத்த வேண்டும்; அதுவும், தருணத்தை உணர்ந்து செயல்பட வேண்டும் என உத்தரவிட்டார், அஸ்திர பலத்துடன் அவனது பலமும் சேர்ந்தது. தனுர் வேதம் கற்றதால், அஸ்திரத்தின் முழு அறிவும் அவனிடம் இருந்தது. மந்திரத்தின் மூலம் தேவதைகளின் அம்சம் அஸ்திரத்தில் இணைவதால், எதிரியை அழிப்பதிலான நம்பிக்கை உறுதிப்பட்டுவிடும். மகாபாரத யுத்தத்துக்காகவே பிறந்தவன்போல், போரில் பெரும் பங்காற்றினான் அஸ்வத்தாமா; பீமனின் புதல்வன் கடோத்கஜனையும், அவனுடைய மகன் அற்ஜனபர்வாவையும் அழித்தான்; இதனால், பீமனின் பரம்பரையே நிர்மூலமானது. அதுமட்டுமா ? துருபத ராஜகுமாரன், சத்ரும்ஜயன், பலாநீகன், ஜயாநீகன், ஜயாச்வான், அரசன் சிருதாஹு போன்றவர்களை அழித்து, வெற்றிக்கு உரமூட்டினான், துரியோதனனுக்கு ! குந்திபோஜனின் பத்து மகன்களையும் அழித்து, எதிரிகளுக்கு தனது வீரத்தை உணர்த்தினான். கோழைகள், ஏமாற்று வழியில் தன்னுடைய தந்தையை அழித்த சேதி கேட்டு, கொதித்தெழுந்தான்.

26-1416985341-1-ashwatthama-immortal

நாராயண அஸ்திரத்தைப் பயன்படுத்தி, த்ருஷ்டத்யும்னனை அழிக்க முற்பட்டான். இந்த அஸ்திரத்தைப் பயன்படுத்தினால், போரின் போக்கினை திசைதிருப்பிவிடும் என அறிந்த ஸ்ரீ கிருஷ்ணர், அனைத்து வீரர்களையும் தேரில் இருந்து இறங்கி, ஆயுதங்களைக் களைந்து, அஸ்திரத்துக்கு அடிபணியும்படி உத்தரவிட்டார். அப்படிச் செய்தால் தான், அஸ்திரத்துக்கு இரையாகாமல் தப்பிக்க முடியும் ! ஆனால், ஸ்ரீகிருஷ்ணரின் வார்த்தையை பீமன் கேட்கவில்லை. நாராயணாஸ்திரம், அவனைத்  தாக்க முயன்றது. அப்போது, அவனை வலுக்கட்டாயமாக தேரிலிருந்து இறக்கிக் காப்பாற்றினார். கிருஷ்ண பகவான் ! நாராயணாஸ்திரம் வலுவிழந்தும்கூட, பதறவில்லை அஸ்வத்தாமா. முழு நம்பிக்கையுடன் ஆக்னேயாஸ்திரத்தை ஏவினான். நெருப்பை உமிழும் அந்த அஸ்திரத்தால், திக்குமுக்காடிப் போனார்கள் எதிரிகள், பகவான் கிருஷ்ணரையும் அர்ஜுனனையும் நெருங்கவில்லை அஸ்திரம். அதுமட்டுமின்றி, த்ருஷ்டத்யும்னனையும் அழிக்க இயலவில்லை. இதைக் கண்டு அதிர்ந்தான் அஸ்வத்தாமா. அப்போது வியாசர் தோன்றி, ஸ்ரீகிருஷ்ணர், ஸ்ரீமந் நாராயணன் ஆவார். அர்ஜுனன், அவரது அம்சத்துடன் விளங்கும் நரன். நர நாராயணரை வெல்வது சுலபமல்ல என அறிவுறுத்தினார். எனவே, நர நாராயணர்களை மனதில் வேண்டி, படைகளுடன் வெளியேறினான் அஸ்வத்தாமா, பிறகு, கர்ணனின் தலைமையில் போரில் இணைந்தவன், த்ருஷ்டத்யும்னனை அழிக்காமல் அஸ்திரத்தைக் களையமாட்டேன் என சூளுரைத்தான். 18-ஆம் நாள் யுத்தம். பீமனும் துரியோதனனும் கதாயுதத்தால் சண்டையிட்டனர். இதில் அடிபட்டு தரையில் வீழ்ந்தான் துரியோதனன். அவனை அங்கேயே விட்டுவிட்டு, பாண்டவர்கள் வெளியேறினர். வேதனையுடன் இருந்த துரியோதனனுக்கு அருகில் ஸஞ்சயன் வந்தார். அஸ்வத்தாமா, கிருபாசார்யர், கிருதவர்மா ஆகியோரை அழைத்தான் துரியோதனன்; நடந்தவற்றை விளக்கினான். அறத்துக்குப் புறம்பான வழியில் துரியோதனனை பீமன் வீழ்த்தியதை அறிந்து, கோபமுற்றான்; பாண்டவர்களைப் கூண்டோடு அழிப்பேன் எனக் கொக்கரித்தான் அஸ்வத்தாமா. இதையடுத்து, கௌரவப் படையின் சேனாதிபதியானான்.

Notification No 8_2012

பதவியேற்ற அன்றைய இரவு, அஸ்வத்தாமா தூங்கவே இல்லை. கொடுத்த வாக்குறுதியால் தூக்கம் வரவில்லை. தன்னுடன் இருவரை அழைத்துக்கொண்டு, அருகில் இருக்கும் காட்டுக்குச் சென்றான். உடன் இருந்த இருவரும் உறங்கிவிட, இவன் மட்டும் மரத்தடியில் அமர்ந்து சிந்தனையில் ஆழ்ந்திருந்தான். திடுமென ஆந்தையின் ஒலி கேட்டு, மரக்கிளையை கவனித்தான். ஆந்தை ஒன்று, கூட்டினில் உறங்கிக்கொண்டிருந்த காக்கைக் குஞ்சுகளை அழித்துவிட்டு வெளியேறியது. சட்டென்று அவனுக்குள், பாண்டவர்களின் வாரிசுகளையும் அப்படித்தான் அழிக்கவேண்டும் எனச் சிந்தித்தான். இது தெய்வம் காட்டிய வழி எனச் சிலிர்த்தான். தூங்கிக் கொண்டிருந்தவர்களை எழுப்பி, தனது திட்டத்தை எடுத்துரைத்தான். ஆனால் கிருபாசார்யர், தவறான வழியில் பழிவாங்குவது தவறு; கௌரவ அழிவுக்குக் காரணமாகிவிடும். வேண்டாம். எதையும் போர்க்களத்தில் சந்திப்போம்; சாதிப்போம் என்றார். அவற்றைக் கேட்கும் மனநிலையில் அஸ்வத்தாமா இல்லை. வேறுவழியின்றி, மூவரும் அன்றிரவே பாண்டவர்களின் கூடாரத்தை நெருங்கினர். இருவரையும் காவலுக்கு வைத்துவிட்டு, தனியே உள்ளே நுழைந்தான் அஸ்வத்தாமா. அங்கே இருந்த காவலன் ஒருவன் தடுத்து நிறுத்த, அஸ்வத்தாமாவிடம் இருந்த அஸ்திரங்கள் யாவும் மறைந்தன. அந்தக் காவலாளி, ஈசனே என அடையாளம் கண்டு கொண்டான் அஸ்வத்தாமா ! அவரைப் பணிந்து வணங்கி, எனது செயலில் வெற்றி பெற ஒரு வாள் தந்து உதவுங்கள் என வேண்டினான். அதன்படி உடைவாள் ஒன்றைத் தந்து மறைந்தார் ஈசன். அந்த வாளுடன் உள்ளே நுழைந்தான் அஸ்வத்தாமா. ஆழ்ந்து தூங்கிக்கொண்டிருந்த த்ருஷ்டத்யும்னன், உத்தமோஜா, யுதாமன்யு, சிகண்டி மற்று திரௌபதியின் ஐந்து புதல்வர்கள் ஆகியோரைக் கண்டதுண்டமாக வெட்டி வீழ்த்தினான். அதையடுத்து, துரியோதனனிடம் சென்று, வாக்குறுதியை நிறைவேற்றிவிட்டதாகச் சொன்னான். அந்த நிம்மதியுடன் செத்துப் போனான் துரியோதனன். மகன்கள் இறந்த சேதி கேட்டுக் கலங்கித் தவித்தாள் திரௌபதி. அஸ்வத்தாமாவின் சிரசைக் கொய்து உன்னிடம் தருகிறேன் என சூளுரைத்தான் அர்ஜுனன். ஸ்ரீகிருஷ்ணருடன் தேரில் ஏறிச் சென்று, அஸ்வத்தாமாவுடன் போரிட ஆயத்தமானான்.

அஸ்வத்தாமாவுக்கு பிரம்மாஸ்திரத்தை ஏவத் தெரியும். ஆனால் அதனைத் திரும்பப் பெறத் தெரியாது, நேருக்குநேர் போர் புரியும் வேளையில், தன்னைக் காப்பாற்றிக் கொள்ளவும். அர்ஜுனனை வீழ்த்தவும் வேறு வழியின்றி பிரம்மாஸ்திரத்தை ஏவினான் அஸ்வத்தாமா. அதேவேளையில், அர்ஜுனனும் பிரம்மாஸ்திரத்தை ஏவினான். அப்போது வியாசரும் நாரதரும் வந்து, உலகை அழிவிலிருந்து காப்பாற்ற, இருவரிடமும் பிரம்மாஸ்திரத்தை திரும்பப் பெறும்படி வேண்டினர். அதற்கு இணங்க, அர்ஜுனன் அஸ்திரத்தைத் திரும்பப் பெற்றான். ஆனால், அஸ்வத்தாமாவால் அஸ்திரத்தைத் திரும்பப் பெற இயலவில்லை. முழு அழிவிலிருந்து திசை திருப்பும் வகையில், உத்தரையின் கர்ப்பத்தில் இருக்கும் சிசுவை நோக்கித் திருப்பினான். அப்போது, பகவான் கிருஷ்ணர், அந்த சிசுவைக் காத்தார்; பரீக்ஷித்து உதயமாவதற்கு உதவினார். பிறகு அஸ்வத்தாமாவைச் சிறைப்பிடித்து, திரௌபதியிடம் நிறுத்தினான் அர்ஜுனன். இரக்க சுபாவம் கொண்ட திரௌபதி, அவனை மன்னிக்கும்படி கூறினாள். அவனது சிரசில் உள்ள ரத்தினத்தை எடுத்து,திரௌபதியிடம் வழங்கினான் அர்ஜுனன். பின்னர், பாண்டவர்களுடனான பகையை மறந்தான் அஸ்வத்தாமா என்கிறது புராணம்! அரசனாகப் பிறக்கவில்லை; அரசனாகவும் ஆசைப்படவில்லை. காலத்தின் தூண்டுதலால் களம் இறங்கினான். அரசாணையை மதித்தான். எடுத்த காரியத்தை முடிப்பதில் வெற்றி கண்டான். பாண்டவர்களின் தலைமுறையை வேரோடு அழித்தான். உத்தரையின் கர்ப்பத்தை அழிக்க முனைந்தான். அதில் அவனுக்குத் தோல்வி இல்லை. பகவான் கிருஷ்ணரின் தலையீட்டால், இறந்த குழந்தை உயிர் பெற்றது. மரணப் படுக்கையில் இருந்த துரியோதனனுக்கு பாண்டவர்களின் இந்த அழிவு சொல்லப்பட…. நிம்மதியுடன் இறந்தான் துரியோதனன். ஆக, இறக்கும் தருணத்தில் அவனுக்கு நிம்மதியைத் தந்தான் அஸ்வத்தாமா. போரில் கலந்து கொள்ளமாட்டேன் என்ற ஸ்ரீகிருஷ்ணரை, திரைமறைவில் அவர்களுக்கு உதவி செய்யத் தூண்டியது, அஸ்வத்தாமாவின் வீரம். தனது அழிவை பொருட்படுத்தாமல், திரும்பப் பெற முடியாது என்று தெரிந்தும் அஸ்திரத்தைத் திசை திருப்பிவிட்ட அவனது நெஞ்சுரம், வாக்குறுதியைச் செயல்படுத்துவதில் இருந்த உறுதி ஆகிய இரண்டுமே வெளிப்பட்டது !

தகாத வழியில் தந்தையைக் கொன்றவர்களை, அதே வழியில் அழிப்பதில் தவறொன்றுமில்லை. உள்நோக்குடன் செயல்படுபவனை அதே வழியில் எதிர்கொள்ளலாம் என்கிறார் சாணக்யன் (சடே சாட்யம் ஸமாசரேத்). தர்மத்துக்கும் அதர்மத்துக்கும் மோதலை ஏற்படுத்தி, கடைசியில் தர்மம் வெல்லும் எனும் தத்துவத்தை உணர்த்த மகாபாரதத்தைப் பயன்படுத்தினார் கிருஷ்ணர்.  பாண்டவர்களைக்கொண்டு, கௌரவர்களை அழிக்க முடிந்தது. ஆனால், பாண்டவர்களை கிருஷ்ண பரமாத்மா அழிப்பது பொருந்தாது. அன்பைச் செலுத்திய பாண்டவர்களை அன்பு செலுத்தியவன் அழிப்பது முரணல்லவா ?! விஷச் செடியாக இருந்தாலும், அதை வளர்த்தவன் அழிக்கத் தயங்குவான் (விஷ விரு÷ஷாபிஸம்வர்…). இரு சாராரும் அழிவைச் சந்திக்க வேண்டும் என்பதே கிருஷ்ணரின் எண்ணம். அதை நிறைவேற்ற கிருஷ்ணருக்கு மறைமுகமாக உதவினான் அஸ்வத்தாமா. தவறு செய்தவன் தண்டிக்கப்பட வேண்டும் எனும் நோக்கில், அவன் துயரத்தைச் சந்தித்தது அவனது பெருந்தன்மை, வீரத்தின் மறுஉருவமும் அவனே ! அவனது மனஉறுதியை எவராலும் குலைக்க முடியவில்லை. செயல்படுத்துவதில் சுயமாக இறுதி முடிவெடுக்கு திறன்ம் அவனிடம் உண்டு. அதர்மத்தின் மூலம் தந்தையையும் துரியோதனனையும் கொன்றனர். இது, ஆறாத காயத்தை உண்டு பண்ணியது; இலக்கினை அடைவதற்கான வழியை ஆராய முற்படவில்லை அவன். மாற்று வழியில் சென்றால், இலக்கை அடையமுடியாது. அஸ்வத்தாமாவின் சரித்திரம், நாம் சிந்தித்துச் செயல்படுவதற்கான திறவுகோல்; வழிகாட்டி  ! மனோவலிமையும் செயல்படுவதில் தீவிரமும் கொண்டு தன்மானத்துடன் வாழ வேண்டும்; உலக நன்மைக்கு பங்கம் வராதபடி செயலாற்ற வேண்டும். அஸ்வத்தாமா நிலைத்த புகழுடன் இருப்பதற்குக் காரணங்கள், இவைதான் !

Leave a Reply