தற்போது சினிமாக்காரர்களை வெகுவாக மிரட்டிக்கொண்டிருப்பது கதை திருட்டு பிரச்சனைதான். ஒரு படத்தை ஒரு வருடம் இரண்டு வருடம் என கஷ்டப்பட்டு படம் எடுத்து அதை ரிலீஸ் செய்யவுள்ள கடைசி நேரத்தில் இந்த கதைதன்னுடையது என்று நீதிமன்றம் சென்று படத்திற்கு தடை கேட்கும் வழக்கம் அதிகரித்து வருகிறது. அதிலும் குறிப்பாக பாதிக்கப்படுவது பெரிய நடிகர்கள் மட்டுமே. கத்தி படத்திற்கு எதிராகவும், லிங்கா படத்திற்கு எதிராகவும் கடைசி நேரத்தில் வழக்கு தொடர்ந்து பெரும் பரபரப்பை ஏற்படுத்தினார்கள்.
தற்போது இந்த கதைத்திருட்டு பிரச்சனை விஸ்வரூபம் எடுத்து வருகிறது. ஒருவழியாக கத்தி, லிங்கா பிரச்சனை முடிந்து இரு படங்களும் வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கும் நிலையில் தற்போது திடீரென அஜீத் நடித்து வரும் ‘என்னை அறிந்தால்’ திரைப்படத்தின் கதை தன்னுடையது என புதியதாக ஒருவர் கிளம்பியிருக்கின்றார். ‘என்னை அறிந்தால்’ படத்தின் இயக்குனர் கவுதம் மேனன் சில வருட்ங்களுக்கு முன்னர் ‘நடுநிசி நாய்கள்’ என்ற படத்தை இயக்கியபோது அவரிடம் உதவி இயக்குனராக பணியாற்றிய ஒருவரின் கதைதான் ‘என்னை அறிந்தால்’ என்று ஒரு வதந்தி கோலிவுட்டில் பரவி வருகிறது.
இதனால் அஜீத் உள்பட படக்குழுவினர் அனைவரும் அதிர்ச்சி அடைந்துள்ளனர். ஜனவரி 9ஆம் தேதி பட ரிலீஸ் தேதி அறிவித்துள்ள நிலையில் திடீரென அந்த நபர் நீதிமன்றம் சென்றால் சிக்கலாகிவிடும் என படக்குழுவினர் அச்சத்தில் உள்ளனர். மேலும் ‘என்னை அறிந்தால்’ படத்தை ‘ஐ’ படத்துடன் ரிலீஸாகாமல் செய்யப்படும் சதி இது என்றும் ஒருசிலர் கூறிவருகின்றனர். இதில் எது உண்மை என்பது இன்னும் சில நாட்களில் தெரிந்துவிடும்