சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்த லிங்கா திரைப்படம் தோல்வி அடைந்தது என்றும் அதற்காக தங்களுக்கு ரஜினி நஷ்ட ஈடு தரவேண்டும் என்றும் விநியோகிஸ்தர்கள் என்ற போர்வையில் போலியாக பலர் பேட்டி கொடுத்து கொண்டிருப்பதாகவும், இதுபோன்ற வதந்தி பரப்புவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் லிங்கா படத்தின் தமிழக மற்றும் கேரளாவில் உரிமை பெற்ற வேந்தர் மூவீஸ் இன்று வெளியிட்டுள்ள ஒரு அறிக்கையில் கூறியுள்ளது.
அந்த அறிக்கையில் லிங்கா படம் டிசம்பர் 12ல் வெளிவந்தது. அந்த நேரத்தில் பள்ளி மாணவர்களுக்கு அரையாண்டு தேர்வு நடந்து கொண்டிருந்தது. மேலும் லிங்கா இதுவரை இல்லாத அளவில் தமிழகத்தில் 600க்கும் மேற்பட்ட திரையரங்குகளில் வெளியானது. இதனால் தியேட்டர் அதிபர்கள் எதிர்பார்த்த வசூல் வரவில்லை.
ஆனால் நேற்று முதல் கூட்டம் கூட்டமாக குடும்பத்துடன் படம் பார்க்க வருபவர்களின் எண்ணிக்கை அதிகரித்து ஹவுஸ்புல் காட்சிகளாக ஓடிக்கொண்டிருக்கின்றது. மேலும் லிங்கா படத்தின் தமிழக மற்றும் கேரள உரிமைகளை பெற்ற நிறுவனம் என்ற முறையில் நாங்கள்தான் உண்மையான வசூல் கணக்கை தெரிவிக்க வேண்டும். எங்களை தவிர போலியாக யாராவது லிங்கா படம் குறித்த வசூலை வெளியிட்டால் அவர்கள் மீது சட்டப்படி கடும் நடவடிக்கை எடுக்க வேண்டிய நிலை வரும் என வேந்தர் மூவீஸ் CEO டி.சிவா எச்சரிக்கை விடுத்துள்ளார்.