திருமலை திருப்பதி ஏழுமலையான் கோயிலில் மூலவர் வெங்கடேஸ்வர பெருமாளுக்கு ஆரத்தி எடுக்கும் வீடியோ காட்சி ஒன்று பிரபல சமூக வளைத்தளங்களான வாட்ஸ்-அப் மற்றும் பேஸ்புக்கில் வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
திருப்பதி கோயிலில் மொபைல்போன், காமிரா உட்பட எந்தவொரு எலக்ட்ரானிக் பொருட்களும் கொண்டுச் செல்ல அனுமதி கிடையாது. தரிசனத்துக்கு செல்லும் பக்தர்கள் வைகுண்டம் காத்திருப்பு அறையில் முழு பரிசோதனைக்கு பிறகே கோவிலின் உள்ளே அனுமதிக்கப்பட்டு வருகின்றனர். இந்த சோதனையை மீறி வைகுண்டம் பகுதியில் உள்ள மகாதுவாரம் அருகில் உள்ள 2ஆவது பரிசோதனை மையத்தில் மொபைல் உள்பட எலக்ட்ரானிக் பொருட்கள் பக்தர்கள் வைத்திருப்பது கண்டுபிடிப்பட்டால் அவற்றை பறிமுதல் செய்து கோயிலின் உண்டியலில் செலுத்தப்படுவது வழக்கம். இந்நிலையில் சமூக வளைத்தளங்களில் வீடியோ எப்படி வெளியானது என்பது புரியாத புதிராகவே உள்ளது.
இந்த வீடியோவை தேவஸ்தான அதிகாரிகளோ அல்லது அர்ச்சகர்கள் அல்லது விஐபிக்கள் யாராவது படம்பிடித்து சமூக வளைத்தளங்களில் வெளியிட்டிருக்கலாம் என சந்தேகம் ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.