பாரதிய ஜனதா கட்சியின் தேசிய தலைவர் அமீத்ஷா நேற்று முன் தினம் சென்னை வந்திருந்த போது அவரது முன்னிலையில் தமிழ் சினிமாவை சேர்ந்த ஒருசில பிரபலங்கள் பாஜகவில் தங்களை இணைத்துக்கொண்டனர். பிரபல இசையமைப்பாளர் கங்கை அமரன், நடிகை காயத்ரி ரகுராம், நடிகை குட்டி பத்மினி ஆகியோர் நேற்று முன் தினம் பாஜகவில் சேர்ந்தனர். இந்நிலையில் நேற்று முன்னாள் திமுக எம்.பியும், நடிகருமான நெப்போலியன் பாஜகவில் தனது ரசிகர்களோடு சேர்ந்து கொண்டார்.
பாஜகவில் சேர்ந்தவுடன் நிருபர்களுக்கு பேட்டியளித்த நடிகர் நெப்போலியன், “”திமுகவில் எனது கடமைகளை செய்யக்கூட வாய்ப்பளிக்கப்படவில்லை. திமுகவில் ஜனநாயகம் என்பதே கிடையாது” என்று கூறியுள்ளார்.
திமுகவில் இருந்து மு.க.அழகிரி நீக்கப்பட்டபோது, அவரது வீட்டுக்கே சென்று ஆதரவை தெரிவித்தவர் நெப்போலியன் என்பது குறிப்பிடத்தக்கது. இதனால், கட்சியில் ஓரங்கட்டப்பட்ட நெப்போலியன், அதிருப்தியில் இருந்துவந்தார். இந்நிலையில், அவரை பாஜகவுக்கு இழுக்க அக்கட்சி நிர்வாகிகள் முயன்றனர். ஆரம்பத்தில் நழுவிய நெப்போலியன், கட்சியிலும் தேர்தலிலும் முக்கிய பொறுப்புக்கள் வழங்கப்படும் என்று உறுதி அளிக்கப்பட்டதன் அடிப்படையில் பாஜகவில் சேர ஒப்புக் கொண்டதாக கூறப்படுகிறது.