குளிர்கால நோய்களை எப்படி எதிர்கொள்ளலாம்?

cold_2251152f

குளிர்காலத்துக்கு முந்தைய பருவம் ஆயுர்வேத மருத்துவத்தில் ‘ஹேமந்த ருது’ எனப்படுகிறது. இத்தகைய மாற்றம் நமது உடலைப் பாதிக்கக்கூடியது. இந்தக் காலத்தில் உடலின் நோய் எதிர்ப்பு சக்தி குறையும். இதனால் தொற்று நோய்கள் ஏற்படுவதுடன், ஏற்கெனவே உள்ள நாள்பட்ட நோய்களின் தீவிரம் அதிகரித்து வலி கடுமையாகலாம்.

இதைச் சமாளிப்பதற்கு ஆயுர்வேத மருத்துவம் ஹேமந்த ரிதுசார்யா (வாழ்க்கைமுறை மாற்றம்), சிசிர் ரிது (உணவுக் கட்டுப்பாடு) ஆகியவற்றைப் பரிந்துரைக்கிறது. குளிர்காலத்தை உடல் ஏற்கவும், பொதுவான நோய்களை முன்கூட்டியே தடுக்கவும், நாள்பட்ட நோய்களின் தீவிரத்தைத் தடுக்கவும் வழிகூறுகிறது.

தட்பவெப்ப மாறுபாடு

குளிர் காலத்தில் கப தோஷம் அதிகரிக்கும். இதனால் இருமல், சளி, சைனஸ், ஆஸ்துமா போன்ற தொற்றுநோய்த் தொல்லைகள் அதிகரிக்கலாம். குளிர் காலத்திலிருந்து வறண்ட நிலைக்கு மாறும்போது வாத தோஷம் ஏற்பட்டு, அதனால் நாள்பட்ட நோய்களின் வலி அதிகரிக்கலாம். இந்தக் காலத்தில் வீக்கம் குறிப்பாக மூட்டு வலி, இடுப்பு வலி, முதுகுத் தண்டுவடத்தில் வலி, ஸ்பான்டிலிட்டிஸ் மற்றும் தோல் அழற்சி ஏற்பட்டு சோரியாஸிஸ், உலர் எக்ஸிமா போன்றவை தோன்றலாம்.

ஜீரணக் கோளாறு

குளிர் காலம் தீவிரமடையும் நேரத்தில் பசி அதிகம் இருக்காது. அஜீரணம் உருவாகலாம். பொதுவாக அதிக உணவுப் பொருட்களை ஜீரணிக்கும் சக்தி கொண்ட குடல் செயல்பாட்டில் மந்தம் ஏற்படும். இந்தக் காலகட்டத்தில் உரிய உணவு வகைகளைச் சாப்பிடாவிட்டால், ஜீரண சக்தி பாதிக்கப்பட்டு உடலில் சோர்வு ஏற்படும்.

உடல் ஆரோக்கியமாக இருக்கத் திடகாத்திரமாகப் பராமரிக்க வேண்டும். குளிர்காலத்திலும் உடலில் வெப்பம் சமநிலையில் இருந்து, குளிரைச் சமாளிக்கும் திறனுடன் இருக்க வேண்டியது அவசியம்.

குளிர்கால உணவு

குளிர்காலத்தில் சாப்பிட வேண்டிய உணவு வகைகள் ஷிஷிரம் (Shishiram) எனப்படுகின்றன. இனிப்பு, புளிப்பு, உப்பு அதிகமுள்ள உணவு, கொழுப்பு அதிகமுள்ள கோதுமை உணவு, மிளகு அதிகம் சேர்க்கப்பட்ட உணவு, பால் பொருள்கள், கரும்புச்சாறு, வெந்நீர் ஆகியவை குளிர் காலத்தில் அதிகம் உட்கொள்ள வேண்டிய உணவு வகைகள். பருவகாலப் பழங்கள், காய்கறிகள், வெப்பம் தரும் உணவு வகைகள் குறிப்பாக இஞ்சி, பச்சை மிளகாய் சேர்த்த உணவுப் பொருள்கள் நோய் எதிர்ப்பு சக்தியைக் கொடுக்கும்.

இவை தவிர உடற்பயிற்சியும் செய்ய வேண்டும். அப்போதுதான் உடல் எடை அதிகரிக்காமல் இருக்கும். கொழுப்பு சேராமல் உடல் அனைத்து வேலைகளையும் எளிமையாகச் செய்யும் வகையில் துடிப்புடன் விளங்கும். சரிவிகித உணவு, தோஷங்களைக் கட்டுப்படுத்துவதுடன் பொதுவான நோய்களிலிருந்தும் காக்கும்.

மூட்டுவலி அதிகரிப்பு

குளிர் காலத்தில் சில நோய்களின் தீவிரம் அதிகரிக்கும். குறிப்பாக உடலில் வீக்கம் ஏற்படும் பகுதிகளான மூட்டு வலி, இடுப்பு வலி, ஸ்பான்டிலிட்டிஸ் ஆகியவற்றில் வலி தீவிரம் அடையலாம்.

காரணம்

வாத தோஷம் அதிகரிப்பால் நாள்பட்ட நோய்களின் தீவிரம் அதிகரிக்கும். வறட்டுக் குளிர் காரணமாக வாதம் அதிகரிக்கும். இது

தோல் திசுக்களை வெகுவாகப் பாதித்து, வழக்கமான செயல்பாடுகளை முடக்கும். மூட்டு வலியைத் தீவிரமடையச் செய்யும். இதேபோல ஸ்பான்டிலிட்டிஸ் தோன்றும் பகுதியில் வலி அதிகரிக்கும்.

உடனடிநிவாரணம்

ஆயுர்வேத மருத்துவத்தில் உடனடி வலி நிவாரணம் கிடைக்காது என்பது பொதுவாக நிலவும்

தவறான நம்பிக்கை. ஆயுர்வேத மருத்துவத்திலும் உடனடி வலி நிவாரணம் கிடைக்கும். ஆயுர்வேத ஷுலக்ணம் (வலி நிவாரணி), வேதனஸ்பதனம் (வலி குறைப்பான்) மூலம் தீவிர வலியைக் குறைக்க முடியும்.

வறட்சியைப் போக்க

குளிர் காலத்தில் தோலில் ஏற்படும் வறட்சியைப் போக்க, ஆயுர்வேத மருத்துவம் சிறப்பு அப்யங்கங்கள் மற்றும் பஞ்சகாம வழிமுறைகள் மூலம் நிவாரணம் அளிக்கிறது. இதற்கு உரிய எண்ணெய் வகைகளைப் பயன்படுத்த வேண்டும். நோயாளியின் உடலியல் அமைப்புக்கேற்ப ஆயுர்வேத மருத்துவர், மருந்துகளையும் எண்ணெய்களையும் பரிந்துரைப்பார்.

நாள்பட்ட சருமப் பிரச்சினைகளுக்கு, அதாவது குளிர் காலத்தில் தோன்றும் பிரச்சினைகளுக்கு வெளிப்பகுதியில் களிம்புகளைப் பயன்படுத்தலாம். ஆயுர்வேத மருத்துவ முறையில் உட்கொள்ளும் மருந்துகளும் அளிக்கப்படும். அத்துடன் வெளிப்பகுதிக்கு எண்ணெய்கள் பரிந்துரைக்கப்படும். இவை கூடுதல் நிவாரணத்தை அளிக்கக்கூடும்.

Leave a Reply