அழகா? ஆபத்தா? கெமிக்கல் பீலிங் சீக்ரெட்ஸ்…

beauty

முன்பெல்லாம் சருமத்தை அழகாக, தூய்மையாகப் பராமரிக்க கிளியோ பாட்ரா போன்ற அழகிகள் தயிரில் உள்ள லாக்டிக் அமிலம், எலுமிச்சையில் உள்ள சிட்ரிக் அமிலம் போன்றதைப் பயன்படுத் தினர். இன்றைக்கு அந்த  இடத்தை கெமிக்கல்கள் பிடித்துவிட்டன. அதில் நவீன வரவு, கெமிக்கல் பீலிங் (chemical peeling). சருமத்தின் நிறத்தைக் கூட்ட, சருமத்தை மென்மையாக்க, வயதான தோற்றத்தை இளமையாக்க, சரும சுருக்கத்தைப் போக்க, பருக்களை நீக்க என பல காரணங்களுக்காக கெமிக்கல்களைப் பூசி, பீலிங் செய்யப்படுகிறது.

லாக்டிக் மற்றும் சிட்ரிக்  போன்ற சருமத்துக்குப் பாதிப்பு ஏற்படுத்தாத அமிலங்களை குறிப்பிட்ட சதவிகிதத்தில் கலந்து முகத்தில் பூசி, சில நிமிடங்களில் துடைத்து எடுத்துவிடுவதுதான் கெமிக்கல் பீலிங்கின் செய்முறை.  சருமப் பிரச்னைக்கு ஏற்ப, இரண்டு நிமிடங்கள் முதல் ஏழு நிமிடங்கள் வரை முகத்தில் கெமிக்கல்கள் பூசப்படும். பின்பு அது நீக்கப்படும். நீக்கப்படும் செய்முறையை நியூட்ரலைசிங் (Neutralizing) என்பர். ஒவ்வொருவரின் சருமப் பிரச்னைக்கேற்ப கெமிக்கல்களும், அதன் அளவும் மாறுபடும். தாவர வகையைச் சேர்ந்த கெமிக்கலான, கரும்பிலிருந்து எடுக்கப்பட்ட கெமிக்கல் போன்றவற்றைப் பயன்படுத்தி பீலிங் செய்யப்படும்.

சூப்பர்ஃபிஷியல் (superficial peel), மீடியம் (medium) மற்றும் டீப் (Deep peel) போன்ற வகைகளில் இந்தச் சிகிச்சைகள் செய்யப்படுகின்றன.  சருமத்துக்கு எந்த பீலிங் சரியாகப் பொருந்துமோ, அதை மருத்துவரே பரிந்துரைப்பார்.

பீலிங் யார் யார் செய்யலாம்?

பரு, பொலிவிழந்த முகம், சருமம் கறுத்துப்போதல் (Tan), கரும்புள்ளிகள், நீங்காத தழும்புகள், சூரியக் கதிரால் ஏற்படும் சருமப் பிரச்னைகள், மங்கு, வயதாகையில் வரும் சுருக்கங்கள், கருவளையம் போன்ற  பிரச்னைகளுக்குப் பலரும் கெமிக்கல் பீலிங் செய்து கொள்கிறார்கள்.  திருமணத்துக்்குப் பளிச் முகம் வேண்டும் என விரும்புவோரும் கெமிக்கல் பீலீங் சிகிச்சையை செய்துகொள்ளலாம். திருமணத்திற்குத் தயாராகுவதற்கு கெமிக்கல் பீலிங் நல்ல பலனைத் தரும். மூன்று மாதங்களுக்கு முன்னரே மருத்துவர் ஆலோசனையோடு செய்து கொண்டால், திருமண நாளன்று பிரகாசமாக ஜொலிக்கலாம். மேக்கப் இல்லாமலே சருமம் பளிச்சிடும்.

உடனடியாக பளிச் முகம் வேண்டுமென்றால், இன்ஸ்டன்ட் பீலிங் செய்துகொள்ளலாம் இதன் பெயர் பார்ட்டி பீலிங். மூன்று நாள் முதல் ஐந்து நாட்கள் வரை முகம் பிரகாசமாக இருக்கும்.

யாருக்கு எந்த பீலிங்?

பரு, மங்கு, கரும்புள்ளிகள் போன்ற சருமப் பிரச்னைகளுக்கு சருமத்தைப் பரிசோதித்த பின்னரே எந்த கெமிக்கல்களை எந்த அளவில் கலந்து சிகிச்சை செய்ய வேண்டும் எனத் தெரியும். பெரும்பாலும் சருமப் பிரச்னைகளுக்கு மீடியம் பீலிங்/சூப்பர்ஃபிஷியல் மூலமாகவே பளிச்சிடும் பொலிவு கிடைத்துவிடும். சருமம் கெமிக்கல் பீலிங் மூலம் சரி செய்யப்பட்டு சருமம் பளிச் எனத் தூய்மையாகிவிடும். க்ளைகாலிக், சாலிசிலிக் போன்ற கெமிக்கல்களை இதற்கெனப் பயன்படுத்துவோம்.

முகத்தில் பருக்கள் அதிகம் இருந்தால், அவர்களுக்கு வினிகர் மற்றும் மல்லிகைப் பூவில் தயாரிக்கப்பட்ட அமிலங்களை சேர்த்து, பீலிங் செய்வோம். இதே போல் கருவளையத்திற்கும், மங்கு பிரச்னைகளுக்கும் தனித்தனியான கலவையில் பீலிங் செய்யப்படுகின்றன.சருமப் பிரச்னைகள் அதிகம் இருந்தால் அட்வான்ஸ்டு பீலிங்கைப் பரிந்துரைப்போம்.

சிகிச்சைக்குப் பின்…

இந்தச் சிகிச்சையில் பயன்படுத்தப்படும் கெமிக்கல்களால்  தோல் உரிந்து புதிய தோல் உருவாகும். நமது சருமத்தில் உள்ள செல்கள் இறந்து, புதிய செல்கள் உருவாவது போன்றதுதான் இது. சிலருக்கு ஒரு வாரம்கூட தோல் உரிந்துகொண்டே இருக்கும். இதைப் பார்த்து பயப்படத் தேவை இல்லை. புதிய தோல் உருவானதும் சருமம் பளிச்செனத் தெரியும்.

எத்தனை முறை செய்து கொள்ளலாம்?

பார்க்க பளிச்செனத் தெரிய வேண்டிய மீடியா போன்ற துறையில் இருப்பவர்கள், 20 நாட்களுக்கு ஒருமுறை பீலிங் செய்து கொள்ளலாம். மற்றவர்கள் மாதம் ஒரு முறை பீல் செய்துகொள்ளலாம். இதனால் சருமம் அழகாக இருக்கும். மீன், பாதாம், வால்நட், சிட்ரஸ் பழங்கள், பழச்சாறு அருந்துவது, நிறைய தண்ணீர் குடிப்பது போன்றவை சருமத்தைப் பளிச்சிடவைக்கும்.

ராதா கிருஷ்ணன், பிளாஸ்டிக் மற்றும் காஸ்மெட்டிக் சர்ஜன்பீலிங் சிகிச்சையில் குறைந்தளவு வீரியம் கொண்ட அமிலங்களே பயன்படுத்தப்படும். இதனால் சருமம் பாதிக்குமோ, எரியுமோ என்ற பயம் வேண்டாம். சருமத்தைப் பரிசோதித்து, சருமத்துக்கு ஏற்ற கெமிக்கல் பீலிங் மட்டுமே செய்யப்படும். சூப்பர்ஃபிஷியல் பீலீங்கில் மேல் தோலில் மட்டுமே சிகிச்சை அளிக்கப்படும். இதற்கு 1015 நிமிடங்களே ஆகும். டீப் பீலிங்கில் மேல் தோல் மற்றும் உட்புறத்தோல் சிகிச்சை செய்யப்படும். இதற்கு ஒரு மணி நேரமாகும். மருத்துவர் அனுமதி  இல்லாமல் பீலிங் செய்யக் கூடாது. சிகிச்சை செய்த உடனே, பளிச்தோற்றம் வராது. மெள்ள மெள்ள சருமத்தில் முன்னேற்றம் தெரியும். பீலிங் செய்வதால் சருமத்திற்குப் பின்விளைவுகள் ஏற்படாது. ஏனெனில் சிகிச்சையை மேற்கொள்ளும் மருத்துவர், சருமத்துக்குத் தகுந்த கெமிக்கல்களை மட்டுமே பயன்படுத்துவார்.

பீலிங் செய்பவர்கள் கவனத்துக்கு…

 குழந்தைகள், கர்ப்பிணிகள் பீலிங் செய்யக் கூடாது.

 பீலிங் செய்துவிட்டு வெயிலில் செல்லக் கூடாது. சருமத்தில்  வெயில் படும்போது எரிச்சல் உண்டாகும்.

 பீலீங் செய்த பின் தோல் உரிந்தால், அதைக் கைகளால் உரிக்கக் கூடாது. தானாக உரிவதே நல்லது.

 சிலவகை பிலிங் செய்த பின் முகத்தைத் தொடக் கூடாது, அரித்தாலும் சொரியக் கூடாது. அப்படி செய்தால், அந்த இடம் மட்டும் பொலிவற்றுக் காணப்படும்.

 மருத்துவர் சொல்லும் க்ளென்சர், சன் ஸ்கிரீன் லோஷன் தடவுவது போன்றவற்றை முறையாகப் பின்பற்ற வேண்டும். மருத்துவர் அனுமதி இல்லாமல், எந்த காஸ்மெட்டிக்ஸும் பயன்படுத்தக் கூடாது.

 பீலீங் செய்த பின் பேஸ் மசாஜ் செய்யக் கூடாது.

 அழகு நிலையங்களில் பீலிங் செய்யவே கூடாது. சரும மருத்துவரிடம் பீலிங் செய்துகொள்வதே பாதுகாப்பானது.

 

Leave a Reply