50 ஆண்டுகளுக்கு பின் தனுஷ்கோடியில் புதிய சாலை. பூமி பூஜையுடன் பணிகள் ஆரம்பம்.

roadகடந்த 1964ஆம் ஆண்டு, தனுஷ்கோடியில் வரலாறு காணாத புயல் தாக்கியதில் அப்பகுதி முழுவதும் கடலில் மூழ்கின. பேரழிவு நடந்து 50 ஆண்டுகள் முடிந்த நிலையில், தனுஷ்கோடியில் இருந்து அரிச்சல்முனை வரை புதிய சாலைகள் அமைக்க ரூ.50 கோடி தற்போது ஒதுக்கப்பட்டுள்ளது. இதையடுத்து முதல்கட்ட பணிகள் நடைபெற பூமிபூஜை முகுந்தராயர் சத்திரம் என்ற இடத்தில் நேற்று நடைபெற்றது.

தேசிய நெடுஞ்சாலைத் துறையின், மதுரை மண்டல கண்காணிப்புப் பொறியாளர் ராஜேந்திரன், இந்த பூமி பூஜையை நடத்தி வைத்தார். பூஜைக்குரிய சடங்குகள் முடிந்தவுடன் தீபாராதனை வழிபாடுகள் நடைபெற்றன. பூஜை முடிந்ததும் நேற்றே மணலை சமப்படுத்தும் பணிகள் துவங்கப்பட்டன.

பூமிபூஜை முடிந்த பின்னர் நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள் செய்தியாளர்களிடம் தெரிவித்தபோது, “ராமேசுவரத்திலிருந்து, 12 கிலோ மீட்டர் தூரத்தில் உள்ள முகுந்தராயர்சத்திரம் வரை சாலை உள்ளது. அங்கிருந்து 9 கி.மீ. தூரத்தில் தனுஷ்கோடி உள்ளது. எனவே, முகுந்தராயர் சத்திரத்திலிருந்து தனுஷ்கோடி அரிச்சல்முனை வரை சாலை அமைக்க மத்திய அரசு, ரூ.50 கோடி மதிப்பீடு செய்துள்ளது. முதல்கட்டமாக முகுந்தராயர் சத்திரத்திலிருந்து, 5 கி.மீ. தூரத்துக்கு சாலை அமைக்க ரூ.25 கோடி ஒதுக்கப்பட்டு பணிகள் துவங்கியுள்ளன.

இந்த சாலை 12 மீட்டர் அகலத்திலும், சாலையில் காற்று மற்றும் கடல் நீரால் அரிப்பு தன்மை ஏற்படாமல் இருக்க 2 அடி உயரத்தில் மற்றும் சாலையின் இரு புறமும் தலா இரண்டரை அடி அகலத்தில் பெரிய கற்களால் நிரப்பப்பட்டு பின்னர் 7 மீட்டர் அகலத்தில் தார் சாலைகள் அமைக்கப்படும். மேலும் இப்பணிகள் நடைபெறும் நிலையில் மீதமுள்ள 4 கி.மீ. தூரத்திலுள்ள தனுஷ்கோடி அரிச்சல் முனை பகுதிவரை ரூ. 25 கோடி மதிப்பில் சாலைகள் அமைக்கும் பணிகள் துவங்கப்படும் என அதிகாரிகள் தெரிவித்தனர்

Leave a Reply