கடந்த சில நாட்களுக்கு முன்னர் பாகிஸ்தான் பெஷாவர் நகரில் ராணுவப் பள்ளி மாணவர்கள் மீது கொடூரமாக நடத்தப்பட்ட தீவிரவாதத் தாக்குதலுக்கு மூளையாக செயல்பட்ட தலிபான் இயக்க தளபதி சதாம், நேற்று பாகிஸ்தான் ராணுவத்தினரால் சுடப்பட்டு பலியாகி உள்ளதாக செய்திகள் வெளியாகி உள்ளன.
நேற்று இரவு பாகிஸ்தானின் ஜம்ருத் என்ற பகுதியில், பாகிஸ்தானின் பாதுகாப்புப் படையினர் நடத்திய அதிரடி தாக்குதலில் தெஹ்ரிக் இ தலிபான் தீவிரவாத இயக்க தளபதி சதாம் கொல்லப்பட்டதாக கூறப்படுகிறது. இந்தத் தாக்குதலின்போது சதாமுடன் இருந்த மேலும் 5 தீவிரவாதிகள் பாகிஸ்தான் பாதுகாப்பு படையினரால் சுற்றி வளைத்துக் கைது செய்யப்பட்டனர்.
கடந்த 16 ஆம் தேதி பெஷாவர் ராணுவப் பள்ளி மீது நடத்தப்பட்ட கொடூரத் தாக்குதலில், 132 பள்ளி மாணவர்கள் உட்பட 148 பேர் கொல்லப்பட்டதை அடுத்து, பயங்கரவாதிகளுக்கு எதிரான நடவடிக்கையை பாகிஸ்தான் அரசு மேற்கொண்டுள்ளது.
தெஹ்ரிக் இ தலிபான் அமைப்பினர் ஊடுருவியுள்ள பாகிஸ்தானின் மேற்கு மலைப் பகுதிகளில் ராணுவம் வான்வழி தாக்குதலை தீவிரப்படுத்தியுள்ளது. கடந்த ஒரு வாரமாக நடை பெற்று வரும் ராணுவத் தாக்குதலில் இதுவரை 500 தீவிரவாதிகள் கொல்லப்பட்டுள்ளனர்.