வர்மக்கலையும் சித்தர்களும்..!

3798136_f520

வர்மக்கலை. என்பது  மருத்துவக்கலையின் ஒரு பகுதி. அது நம் நாட்டு சித்தர்களால் உருவாக்கப்பட்ட அரிய மருத்துவமுறை. இன்று அக்கலை தற்காத்துக்கொள்ளவும், எதிரிகளை வீழ்த்தவும் பயன்படுத்தப்பட்டாலும் ஆரம்பத்தில் அது சித்தர்களால் மருத்துவசிகிச்சைக்காகவே பயன்படுத்தப்பட்டு வந்தது. மனித உடலின் மேற்பரப்பிலுள்ள நரம்புமுனைகள் சிலவற்றை வர்ம ஸ்தானங்கள் எனச் சித்த மருத்துவர்கள் குறிப்பிடுவர். இந்நரம்பு முனைகளில் அடி விழுந்தால் உடலின்  உள்ளுறுப்புகளுக்கு காயம் நேருமென்றும், உயிருக்கே ஆபத்து விளையக்கூடுமென்றும் கருதப்படுகின்றன. ஆனால் அதே இடங்களில் சில தொடு உணர்வுகள் மூலம் மென்மையான சிகிச்சை அளித்து, குறிப்பிட்ட உள்ளுறுப்புகளின் செயல்திறனை அதிகரித்து, குறிப்பிட்ட உள்ளுறுப்புகளின் செயல்திறனை அதிகரித்து, உடலியக்கத்தை சீராக்கவும் முடியும் என்பதைக் கண்டறிந்திருந்தார்கள் சித்தர்கள். இது குறித்த அறிவியலே வர்மக்கலை ஆகும்.

உலகத் தற்காப்புக் கலைகளுக்கெல்லாம் முன்னோடியாகத் திகழ்ந்தவர்கள் நமது சித்தர்கள் என்பதை எவரும் மறுக்கமுடியாது. ஆன்மிக ரகசியங்களை உணர்ந்து கொள்ளத் தனக்கு உறுதுணையாக இருந்தது சிலம்பம் எனும் தற்காப்புப் பயிற்சியே என்பதை அகத்தியர் தனது கம்பு சூத்திரத்தில் தௌவுபடக் கூறுகிறார். மேலும் எதிரியின் கால் வரிசையை வைத்தே அவனுடைய சுவாசம் நிலை அறிந்து, சரியானபடி தாக்கி வெல்ல முடியும் என்பதையும் தெளிவுபடக்கூறுகிறார் அகத்தியர்.

வர்மக்கலை அகத்திய மாமுனிவரால் கண்டுபிடிக்கப்பட்டது. இது உருவான இடம் பொதிகைமலை (தற்போதைய குற்றால மலை). அகத்தியர் கற்பித்த வர்மக் கலைகளுள் அகத்தியர் வசிவர்மம், அகத்தியர் வர்மக் கண்ணாடி, அகத்தியர் வர்ம வரிசை, அகத்தியர் மெய் தீண்டாக் கலை ஆகியன குறிப்பிடத்தக்கவை. எலும்பு முறிவு ஏற்பட்டவர்கள், உடலின் முக்கிய உறுப்புகளில் அடிபட்டதால் வாதநோய் ஏற்பட்டவர்களை வர்மக்கலையைப் பயன்படுத்தி சித்தர்கள் மிகச்சுலபமாகக் குணப்படுத்தி வந்தனர்.

வர்மக் கலையை அகத்தியர் நான்கு பிரிவுகளாகப் பிரித்திருக்கிறார். அவை:

தொடு வர்மம்: பலமாகத் தாக்கப்படுவதன் மூலம் ஏற்படுகிறது. இதை எளிதில் குணப்படுத்த முடியும்.

தட்டு வர்மம்: இது ஒரே ஒரு விரலை மட்டும் பயன்படுத்தி, தாக்கப்படுபவரின் உடலில் வலி ஏற்படாமல் மிக லேசாக தட்டுவதன் மூலம் பாதிப்புகளை ஏற்படுத்துவதாகும். இம்முறையில் தாக்கப்படுபவரை இதற்கு உரிய தனியான சிகிச்சை முறையில் மட்டுமே குணப்படுத்த முடியும்.

நோக்கு வர்மம்: பார்வையை ஒரே இடத்தில் செலுத்தி விளைவுகளை ஏற்படுத்துவதே நோக்கு வர்மம் ஆகும். இந்த முறை ஆபத்தானது என்று அகத்தியர் குறிப்பிடுகிறார். நோக்கு வர்மம் முறையில் தேர்ச்சி அடைந்தவர்களுக்கு நிகர் உலகில் எவரும் இல்லை எனச் சொல்கிறார்.

படு வர்மம்: நான்கு வகை வர்மங்களில் அபாயகரமானது இதுவே! உடலில் உள்ள வர்மப் பகுதிகளில் அடியோ தாக்குதலா ஏற்படுத்தினால் அதுவே படுவர்மம் ஆகும். இத்தாக்குதலுக்கு ஆளானவர்கள் உயிரிழக்கும் அபாயம் உள்ளதால் இது மிகவும் ஆபத்தானது என்று அகத்தியர் குறிப்பிடுகிறார்.

அதேபோல வர்மக்கலையால் தாக்கவோ, பாதிப்பினைப் போக்கவோ எல்லோராலும் இயலாது. மிகுந்த பயிற்சி உள்ளவரால் மட்டுமே இது சாத்தியமாகும் என்கிறார். அதோடு, தலையில் முக்கியமான 37 வர்மப் புள்ளிகளும், நெஞ்சுப் பகுதியில் 13 வர்மப் புள்ளிகளும், உடலின் முன் பகுதியில் 15 வர்மப் புள்ளிகளும், முதுகுப் பகுதியில் 10 வர்மப் புள்ளிகளும், கைகளின் முன் பகுதியில் 9 வர்மப் புள்ளிகளும், கைகளின் பின் பகுதியில் 8 வர்மப் புள்ளிகளும், கால்களின் முன் பகுதியில் 19 வர்மப் புள்ளிகளும், கால்களின் பின் பகுதியில் 13 வர்மப் புள்ளிகளும், கீழ் முதுகுப் பகுதியில் 8 வர்மப் புள்ளிகளும் இருப்பதாகக் குறிப்பிட்டிருக்கிறார்.

காலன், வன்மம், ஏமம், சூட்சுமம், அடக்கம் ஆகியன வர்மக்கலையைக் குறிக்கும் மாற்றுப்பெயர்கள். வர்மக்கலை கற்றவரால் எதிரியை வீழ்த்துவதைப் போலவே, வீழ்ந்துக் கிடப்பவரை எழுப்பவும் முடியும். வர்ம அடி பட்டவனை குறிப்பிட்ட காலத்திற்குள் எழுப்பிட விட வேண்டும். இல்லையேல், அவனுக்கு மரணம் சம்பவிக்கும். எனவே காலன் என்பார்கள். வலிந்து தாக்குதலை வன்மம் என்ற சொல் குறிக்கும். பாதுகாப்பைக் குறிப்பது ஏமம்; உடலின் சூட்சுமமான ஸ்தானங்களை உட்படுத்தியதால் அடக்கம் என்றும் குறிப்பிடுவர்.

வேறெந்தத் தற்காப்புக் கலைகளிலோ மருத்துவ <உத்திகளிலோ இல்லாத அதிசயங்கள் வர்மத்தில் உண்டு. ஒளிவு, பூட்டு, பிரிவு என்னும் மூன்று அடிமுறை உத்திகளும் வர்மக்கலையில் இருப்பதுபோல் வேறெந்தத் தற்காப்புக் கலையிலும் இல்லை.

வெட்டுக் காயங்களிலிருந்து பீறிடும் ரத்தத்தை எந்தக் கட்டும் போடாமலேயே வர்ம நரம்புப் பிடியால் கட்டுப்படுத்தி நிறுத்திவிட முடியும். ஜன்னி, வாந்தி ஆகிய நோய்களை எந்தவித மருந்தும் இல்லாமலேயே வர்மக்கலையின் தடவுமுறைகளால் உடனடியாகச் சரிசெய்துவிட முடியும். ஒற்றைத் தலைவலி என்னும் கொடிய நோயை கணுக்காலில் உள்ள வர்ம அடங்கல் கொண்டு நாலைந்து நிமிடங்களில் ஒட்டிவிடலாம். இக்கலை மூலம் ஒருவர் தாக்கப்பட்டால் அதற்கென்று தனியாக உள்ள சிகிச்சை முறையைப் பயன்படுத்தியே சரிசெய்ய முடியும் என, அப்பனே வர்மத்தில் அடி பிடி வெட்டு குத்து கற்று பின் வரிசையுடன் பின் வர்ம இலக்கு செய்யே! என்ற வரிகள் விளக்குகின்றன.

நரம்பியலின் அடிப்படை தான் வர்மம், சுவாசத்திலுள்ள பிராணவாயு நுரையீரலில் அதிகநேரம் தங்குவதன் மூலம் உடலுக்குக் கூடுதலான பிராண சக்தி கிடைக்கிறது என்பதை சித்தர்கள் கண்டறிந்து, சுவாசத்தை பயிற்சியின் மூலம் முறைப்படுத்தினர். இதைத்தான் பிராணாயமம் என பெயரிட்டு அழைத்தனர். வர்மக் கலைக்கு பிராணாயமம் அத்தியாவசியமான பயிற்சி.

இந்த உச்சந்தலை சுவாசம் பற்றி அறியாமல் எந்த ஒரு வர்ம மருத்துவரும், மருத்துவராக முடியாது. சரசுவாசமும், உச்சந்தலை சுவாசமும் பற்றிய உற்மை நிலைகளை அறிந்திருந்தால்தான் உடலில் உள்ள வர்மப் புள்ளிகள் பற்றித் தெரிந்துகொள்ள முடியும். காரணம் சரசுவாசம், உச்சந்தலை சுவாசம் இரண்டின் மூலம்தான் வர்மப் புள்ளிகளின் இயக்கம் நடைபெறுகிறது. இந்த வர்மப் புள்ளிகளின் இயக்கம்தான் நரம்புகளின் இயக்கம், ரத்த ஓட்டத்தின் நிலை, இவையெல்லாம் சுவாசத்தைப் பொறுத்தே இயங்குகின்றன.

வர்மக்கலையின் அடிப்படைத்தேவை மனக்கட்டுப்பாடு, தவப்பயிற்சி, தவத்தில் சிறந்து இறையுணர்வு பெற்று அறநெறியில் வாழ்பவர்களுக்கு வர்மக்கலை கற்றுத்தரப்படும். அவர்களுக்குத்தான் வசப்படும். நேரடியாக குருவின் மூலம் மட்டுமே வர்மக்கலையைக் கற்க முடியும். இறையின் அருளும் குருவின் துணையும் இருந்தால்தான் வர்மக்கலையைக் கற்று, பிறருக்கு <உதவ முடியும்.

சித்தர் பெருமக்களின் தவத்தால் நமக்குக் கிடைக்கப்பெற்ற இந்த வர்மக்கலை, நரம்பியல் சிகிச்சையில் தலைசிறந்து விளங்குகிறது. நரம்புகளின் பெயர்களைக்கூட வகை தொகைப்படுத்தி வர்மநூல்கள் போதிக்கின்றன. அனைத்து விதமான நரம்பு நோய்களுக்கும் வர்ம மருத்துவம் சிகிச்சை அளிக்கிறது. இந்த மருவத்துவத்தால் எதிர்விளைவோ பக்கவிளைவோ இல்லை. மருத்துவமும் ஆன்மிகமும் கலந்தது வர்மக்கலை. எனவே வர்மக்கலையைக் கற்றறிந்து, அதனைப் பிரயோகிக்கும் நிபுணத்துவம் உடையோரை வர்மாணி ஆசான் என அழைப்பது வழக்கம்.

கேரள மாநிலத்திலும் திருவிதாங்கோடு சமஸ்தானத்தின் ஒரு பகுதியாக இருந்த இன்றைய கன்னியாகுமரி மாவட்டத்திலும் வர்மாணி ஆசான் பரம்பரையைச் சேர்ந்தோர் பலர் உள்ளனர். வர்மக்கலை என்பது களரிப் பயிற்று எனப்படும் போர்முறைக் கல்விப் பயிற்சிப் புலத்தின் உயர் கல்விப் பிரிவைச் சேர்ந்ததாகும். ஆயினும், இதன் ஆக்கப்பூர்வமான பயன்பாடே, வர்ம சிகிச்சை என்ற மருத்துவச் செயல்பாடே பரவலாக அறியப்பட்டுள்ளது. சீன நாட்டு அக்குபங்க்சர் சிகிச்சை முறை அண்மைக் காலமாக நம் நாட்டில் பிரபலமடைந்துள்ளதாலும், அச்சிகிச்சை முறையிலும் வர்மஸ்தானங்களுக்கு இணையான நரம்பு முனைகள் குறிப்பிடப்படுவதாலும் வர்ம சிகிச்சை குறித்த வாய்ந்த வர்ம மருத்துவம் அகத்திய்ர காலம்தொட்டு அரசர்களுக்கு அளிக்கப்படும் ராஜவைத்தியமாகவே இருந்து வந்திருக்கிறது.

வர்மக் கலையில் மிக உச்சம் தொட்டவர்களுக்கே நோக்கு வர்மம் சாத்தியமாகும். பார்வையாலே தாம் நினைத்ததை சாதிக்கும் திறன் இதனால் ஏற்படும்.

சித்தர்களின் தெய்வமாகவே போற்றப்படும். சிவபெருமானே இந்த வர்மக் கலையையும் உலகிற்கு அளித்தார். தலைமைச் சித்தரான ஈசன், திரிபுராதியரைத் தம் விழியால் நோக்கி, சிரிப்பினால் சிதைத்து அழித்ததை நோக்கு வர்மக்கலையைப் பிறப்பித்தவர், பிறைசூடனே என்பதற்கான ஆதாரம் என்றே சொல்லலாம்.

விநாயகர் முன் நெற்றியில் குட்டிக் கொள்வது, காது நுனிகளைப் பிடித்தபடி தோப்புக் கரணம் போடுவதும்கூட வர்ம சிகிச்சை சார்ந்ததுதான். சோர்வுடன் தெம்பு குறைந்து காணப்படும் போது வர்மப்புள்ளிகள் இருக்கும் இடத்தை சாதாரணமாகத் தட்டி விட்டால் சுறுசுறுப்பு அடையலாம் என்கிறது வர்மம்.

குற்றாலத்தில் குளித்தால் நோய்கள் விலகி விடும் என்பது நம்பிக்கை. இதற்குக் காரணம், அருவியிலிருந்து விழுகின்ற மூலிகை நீர் தலையிலும் உடலிலுள்ள வர்மப்புள்ளிகள் மீது நம்மை அறியாமலே படும்போது நோய்கள் தானாகவே குணமாகும் வாய்ப்பு ஏற்படுகிறது. கண்ணகி மதுரையை எரித்தது நோக்கு வர்மத்தின் அடிப்படையில்தான் என்பர்.